ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இவர்களுக்குள் ஒருவாரம் கிளப் ஹவுஸ் டாஸ்க் நடந்தது. பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் குழுக்களாக பிரிந்து வீட்டு வேலைகளை பிரித்து செய்தனர். இவர்களுக்குள் 40வது நாள் நடக்கவேண்டிய சண்டை, சச்சரவுகள், புரிதல் பிரச்சனைகள், உரசல்கள், நட்பு என அனைத்துமே இந்த ஒருவாரத்திலேயே காண முடிந்தது. இந்த நிலையில் வார இறுதியில் நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் போட்டியாளர்களிடையே பேசினார்.
இதில் கவனிக்கத்தக்க போட்டியாளராக மாறி இருக்கிறார் ஜிபி முத்து. முன்னதாக முதல் நாள் ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டுக்குள் தனியே சென்றதாக சொல்லி புலம்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை மேலும் பயமுறித்திய நடிகர் கமல்ஹாசன் ஜாலியாக ரசித்தார். பின்ன ஜிபி முத்து மழையில் ஆடினார். பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் போட்டியாளர்கள் குழுவாக பிரிந்தபோதும் கூட, மற்ற அணிகளுக்கு ஹெல்ப் பண்ணுவேன் என அடம் பிடித்து அனைவருடனும் பழகினார். இருப்பினும் தனலட்சுமி, தான் கோபமாக பேசியதை மரியாதைக்குறைவாக எடுத்துக்கொண்டதை குறிப்பிட்டு கடந்தவாரம் அழவும் செய்தார்.
இதனை தொடர்ந்து தற்போது வார இறுதியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகை இந்த கமல்ஹாசன், ஜிபி முத்துவிடம் பாதாம் கொடுத்து அது என்ன என்று கேட்க, ஜிபி முத்து பாதாம் என்று சொல்ல, இது தெரிகிறது .. ஆதாம் தெரியவில்லையா? என கிண்டல் அடித்தார். அப்போதும், ஆதாம் எங்கே இருக்கிறார்? என்று வெள்ளந்தியாக ஜிபி முத்து கேட்டிருந்தார். பின்னர் ஜிபி முத்துவுக்கு ஒரு போஸ்ட் பாக்ஸை அனுப்பி, அவருக்கு வந்ததாக சில கலகலப்பான லெட்டரை படிக்கும் நிகழ்வு நடந்த்து. எல்லாவற்றையும் தன் பாணியில் ஜிபி முத்து கையாண்டார். இதன் முடிவில் பேசிய கமல், ஜிபி முத்துவை தனக்கு பிடிக்கும் என்றும், அவர் ஒரு பரந்து விரிந்த களம் என்றும், அவருடன் எப்படியும் விளையாடலாம் என்றும் புகழாரம் சூட்டினார்.