RRR திரைப்படம் பல மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் (25.03.2022) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர். இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகியது.
இந்த படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர் ஆவார். ஜூனியர் என்டிஆர், கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார்.
இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் மையக்கரு. RRR படம் உலகம் முழுவதும் 1100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலாக ஈட்டியது. ஒடிடியில் இந்த படம் வெளியான பிறகும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது
இந்த திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இந்த படம் சிறந்த பாடல் மற்றும் சிறந்த அந்நிய நாட்டு திரைப்படம் ஆகிய இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இதில் சிறந்த பாடலுக்கான விருதை நாட்டு நாட்டு பாடல் வென்றுள்ளது. இசையமைப்பாளர் கீரவாணி விருதை பெற்றுக் கொண்டார். ஜனவரி மாதம் 10 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இந்த கோல்டன் குளோப் விருது விழாவில் ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர், அவரது மனைவி லட்சுமி ப்ரணதி நடிகர் ராம் சரண், அவரது மனைவி உபசன்னாவும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குடன் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவை ட்விட்டரில் பகிர்ந்த RRR பட இயக்குநர் SS ராஜமெளலி, “நான் கடவுளை பார்த்துட்டேன்!” என குறிப்பிட்டு தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதேபோல் இப்படத்தின் இசையமைப்பாளர் MM கீரவாணி(தெலுங்கில் SS மரகதமணி என அறியப்படுபவர்), “திரைப்படங்களின் கடவுளை பார்க்கக் கூடிய பாக்கியம் கிடைத்து, அவரது திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதோடு ‘நாட்டு நாட்டு’ பாடல் பிடிக்கும் என்று அவர் சொன்னதை நம்பவே முடியவில்லை என்னால்” என ஆச்சர்யமாக குறிப்பிட்டுள்ளார்.