இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கிய ஒளிப்பதிவாளர் P C ஸ்ரீராம் ISC.
இந்திய அளவில் புகழ்பெற்ற தேவர் மகன், குருதிப்புனல், நாயகன், திருடா திருடா, கீதாஞ்சலி, அபூர்வ சகோதரர்கள், அலைப்பாயுதே, முகவரி, மௌனராகம், பா, ஓகே கண்மணி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். நாயகன் திரைப்படத்திற்காக ஒளிப்பதிவில் தேசிய விருதை வென்றவர்.
சமீபகாலமாக தனது சமூகவலைதளங்களில் தான் எடுத்த சிறந்த புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக கொண்டுள்ளவர் பி.சி.ஸ்ரீராம், அரசியல் தொடர்பாகவும் பல கருத்துக்களை ஆணித்தரமாக சொல்வதில் பி.சி.ஸ்ரீராம் பிரபலமானவர். கடந்த சில வருடங்களாகவே மத்திய அரசின் சில நடவடிக்கைகளுக்கு எதிராக பல கருத்துக்களை இவர் தெரிவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சில நாட்களாக சென்னை முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் P C ஸ்ரீராம் கருத்து தெரிவித்துள்ளார். அதில் "முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவரை அவரது வேலையை செய்ய விடுங்கள். அரசியல் எல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். மக்களாகிய நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே இது போன்ற இன்னல்களை கடந்து வர முடியும். இந்த பிரச்சினைகள் எல்லாம் முடிந்த பிறகு அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் சண்டைகளை வைத்துக் கொள்ளட்டும். அரசியல்வாதிகளின் உண்மையான குணம் மக்களாகிய நமக்கு தெரியும். அரசியல்வாதிகள் இதில் விளம்பரம் செய்ய மக்கள் நாம் அனுமதிக்கக் கூடாது’’ எனக் கூறியுள்ளார்.