கேஜிஎஃப் 1 மற்றும் கேஜிஎஃப் 2 ஆகிய இரண்டு படங்களின் மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றியை அடுத்து இந்தியாவின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமாக ஹோம்பாலே நிறுவனம் மாறி உள்ளது.
கடந்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப். இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிட்டார்.
இந்த படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 134.5 கோடி ரூபாயை மொத்த வசூலாக வசூலித்தது. முதல் இரண்டு நாளில் இந்த படம் 240 கோடி ரூபாயை வசூலித்தது. இந்த படம் உலகம் முழுவதும் முதல் 4 நாளில் 546 கோடி ரூபாயை மொத்த வசூலாக வசூலித்தது.
தமிழ் நாட்டில் மட்டும் கே.ஜி.எஃப் -2 படம் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் (ஸ்கிரீன்) ரிலீசானது. உலகம் முழுவது 10,000 ஸ்கிரினில் ரிலீசாகி 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.
இதே போல காநதாரா திரைப்படமும் உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்தது. தற்போது ஹோம்பாலே நிறுவனம், பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் சலார், பிரித்வி ராஜ் நடிப்பில் டைசன், பஹத் பாசில் நடிப்பில் தூமம், ரக்சித் ஷெட்டி இயக்கத்தில் ரிச்சர்ட் ஆண்டனி ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் கிரகந்தூர் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,"ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பாக, புத்தாண்டுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் எங்கள் மீது அசைக்க முடியாத அன்பையும் ஆதரவையும் பொழிந்ததற்காக உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். கடந்த ஆண்டு எங்களுக்கு சிறப்பானதாகவும் நிறைவானதாகவும் அமைந்தது. உங்கள் அன்பு மற்றும் ஆதரவினால்தான் இது சாத்தியமானது. உங்கள் அனைவருக்கும் நன்றி மற்றும் இந்த உறவு தொடரும் என்றும் நாம் ஒன்றாக பல மைல்கற்களை அடைவோம் என்றும் நம்புகிறேன்.
சினிமா பொழுதுபோக்கு என்பது பழங்காலத்திலிருந்தே உள்ளது, அது அனைவராலும் பார்க்கப்பட்டு பாராட்டப்பட்டது. நல்ல நேரமோ அல்லது கெட்ட நேரமோ, சினிமா நிவாரணமாகவும் மகிழ்ச்சியின் மிகப்பெரிய ஊடகமாகவும் இருந்து வருகிறது. இது நமது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் வலுவான அமைப்பாக இருந்து வருகிறது, இதன் மூலம் நமது அடையாளத்தை உலகிற்கு பெரிய அளவில் வெளிப்படுத்தி வருகிறோம்.
பன்முகத்தன்மை கொண்ட இந்திய நாட்டின் இளைஞர்களிடம் இருக்கும் பரந்த திறனை வெளிக்கொணர ஒரு பரந்த வாய்ப்பை நமக்கு சினிமா வழங்குகிறது.
இந்த புதிய ஆண்டை நாங்கள் தொடங்கும்போது, நீடித்த நினைவாற்றலைக் கொண்டிருக்கக்கூடிய மற்றும் உங்கள் மீது ஒரு அழியாத தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆழ்ந்த அனுபவத்துடன் அழுத்தமான உள்ளடக்கத்தை கொண்ட திரைப்படங்களை தயாரிப்பதாக உறுதியளிக்கிறோம். இந்த ஆர்வத்தை மனதில் கொண்டு, பொழுதுபோக்கு துறையில் நிலையான வளர்ச்சிக்காக வரும் 5 ஆண்டுகளில் ₹3000 கோடி முதலீடு செய்ய உறுதியளிக்கிறோம்.
அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வளமான புத்தாண்டு வாழ்த்துக்கள்! உண்மையுள்ள, விஜய் கிரகந்தூர்" என குறிப்பிட்டுள்ளார்.
Also Read | ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேயின் தந்தை மரணம்.. இரங்கல் தெரிவித்த நிதியமைச்சர்..