நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி தனக்கே உரிய ஹிப்ஹாப் பாடல்களால் அனைவரையும் கவர்ந்தார்.
பின்னர் பல படங்களில் இசையமைத்து வந்த ஹிப்ஹாப் ஆதி நட்பே துணை, மீசைய முறுக்கு, நான் சிரித்தால் உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகனாகவும் நடித்தார். அந்த திரைப்படங்களில் அவரே இசையமைத்ததுடன் சில திரைப்படங்களை அவரே இயக்கினார்.
ஆனால் ஆரம்பத்தில் சுயாதீன இசைக்கலைஞராக தோன்றி பல புரட்சி பாடல்களை தனி ஆல்பங்களாக வெளியிட்ட அந்த ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு இன்னும் ரசிகர்கள் ஏராளம் உண்டு. அந்த ஹிப் ஹாப் தமிழா ஆதி திரும்பவும் ஆல்பம் பாடல்களை செய்து வெளியிட மாட்டாரா என்று அவர்கள் ஏங்கிக் கொண்டிருந்த இந்த தருணத்தில் ஹிப்ஹாப் ஆதி ஒரு ஆல்பம் தொகுப்பினை தயார் பண்ணுவதாக அறிவித்தார்.
நா ஒரு ஏலியன், எனும் இந்த ஆல்பம் தொகுப்பில் இணையம் என்கிற பாடலை இப்போது வெளியிட்டு இருக்கிறார். இந்த பாடல் இணையதளத்தில் வைரலாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் இந்த பாடல் அவருக்கே உரிய ஹிப்ஹாப் ஸ்டைலில் தற்போதைய நிகழ்வுகளை மையப்படுத்தி இருப்பது தான்.
“இணையம் என்பது மாயக்கண்ணாடி அதில் ஒளிந்து கொண்டோர் எல்லாம் பின்னாடி” என தொடங்கும் இந்த பாடலில், “தொழில்நுட்பத்திலே உலகம்.. தொழில்நுட்பம் செய்யும் கலகம்.. மனிதத்தில் வைரஸ் பரவும்.. மனிதா கொஞ்சம் கவனம்.. தலையைக் கீழே தொங்கப்போட்டுகிட்டே நடக்கிறோம்..
ஒவ்வொரு பிரச்சனையும் டக்குனு தான் கடக்கிறோம்.. அடுத்த தலைமுறையையும் சேர்ந்து கெடுக்கிறோம்.. என்ன ஆச்சு நண்பா நாம் வெறுப்பையே விதைக்கிறோம்!” என வரிகள் தெறிக்கவிடுகின்றன. திங்க் மியூசிக்கில் இந்த பாடல் வெளியாகியுள்ளது.