தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை திட்டமிட்டபடி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற ஜூன் 23 ஆம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் களமிறங்கியது.
இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாகக் கூறி தேர்தலை தற்காலிகமாக நிறுத்து மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, நடிகரும், சங்க பொதுச் செயலாளருமான விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் பதிவாளரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், திட்டமிட்டபடி, ஜூன்.23ம் தேதி நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதியும் வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து, நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நீதியின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. சட்டத்திற்கு மேலானவர்கள் எவரும் இல்லை. இறுதி வரை நடிகர் சங்க கட்டிடத்திற்காக போராடுவேன்’ என விஷால் தெரிவித்துள்ளார்.