சென்னை, 16, பிப்ரவரி 2022: ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், குளோபல் ஒன் ஸ்டூடியோஸ் இணைத் தயாரிப்பில், துல்கர் சல்மான், காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்‘ஹே சினாமிகா’.

ஹே சினாமிகா மையக்கரு..
உற்சாகம் மிக்க தனித்துவ இளைஞரான யாழன் (துல்கர்), அவரை காதலிக்கும் வானிலை விஞ்ஞானி மௌனா (அதிதி) ஆகியோரின் வாழ்க்கைக்குள் டிரைலர் நம்மை அழைத்துச் செல்கிறது. ஓரிரு வருடங்களுக்குப் பிறகு அவர்களது உறவில் என்ன நடக்கிறது, மலர்விழி (காஜல்) வருகைக்குப் பின்னர் எப்படி எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது என்பதுதான் கதையின் மையக்கரு.
ஹே சினாமிகா டிரைலர்..
இந்த படம் 2022, மார்ச் 3-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் டிரைலர் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த டிரைலரில், துல்கரும் அதிதி ராவும் காதல் திருமணம் செய்துகொள்ள பின்னர் இருவருக்கும் எழும் முரண் காரணமாக அதிதி அவரை விவாகரத்து செய்ய நினைக்கிறார். விவாகரத்து ஆன ஒருவருக்கு கை கொடுத்து, “கங்க்ராட்ஸ்.. எப்படி டிவோர்ஸ் பண்ணீங்க?” என கேட்டு அதகளம் பண்ணுகிறார்.
காதல், காமெடி, ரொமான்ஸ் என இளமை ததும்பும் இந்த டிரைலரில், பாதிக்கு மேல் காஜல் அகர்வால் அறிமுகமாகி அசரவைக்கிறார். பின்னர் துல்கருக்கும் காஜலுக்குமான ஆத்மார்த்தமான உறவு மென்மையாக காட்டப்படுகிறது. இறுதியின் தன் கணவர் தனக்கு திரும்ப வேண்டும் என்று அதிதி, காஜலிடம் கேட்கிறார். இப்படி இறுதியில் துல்கர் யாருடன் சேரப் போகிறார் என கொண்டு போகிறது இந்த ஹே சினாமிகா டிரைலர்.
தொழில்நுட்பக் குழு விபரம்.
‘96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஒளிப்பதிவை ஐ எஸ் சி பிரீத்தா ஜெயராமன் கவனித்துக்கொள்ள, படத்தொகுப்பை ராதா ஸ்ரீதர் மேற்கொள்கிறார்.
இப்படத்தின் எழுத்து மற்றும் பாடல்களை மதன் கார்க்கி எழுதுகிறார். கலை இயக்கத்தை எஸ் எஸ் மூர்த்தி / செந்தில் ராகவன் மேற்கொள்ள, அஷோக் சண்டை பயிற்சியை செய்கிறார்.