விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து வந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இந்நிலையில், அவர் திடீரென மரணமடைந்த செய்தி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி அடைய செய்தது.
போலீசார் தரப்பில், "ஹேமந்த், சித்ரா மீது சந்தேகம் கொண்டு அவரை கடுமையாக பேசியதால்தான் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி அந்த முடிவை எடுத்தார்" என்றும் கூறப்பட்டு, அவரை கைது செய்து சிறையிலடைத்துள்ளது. ஆனால் ஹேம்நாத்தின் தந்தை, "யாரை காப்பாற்ற என் மகனை கைது செய்துள்ளனர்" என்று சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு குற்றச்சாட்டுகளுடன் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், "தற்பொழுது தான் எனக்கு பல சமூக வலைதளங்கள் மூலமாக வெளிவந்த தகவல்கள் மூலம் V.J.சித்ரா ஏற்கனவே மூன்று ஆண்களை காதலித்துள்ளதாகவும், அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே நிச்சயதார்த்தம் வரை சென்று ஒரு திருமணம் நின்றுள்ளதாகவும் தெரியவருகிறது. அதுமட்டுமல்லாமல் V.J.சித்ரா மதுபழக்கத்திற்கு உள்ளானவர் என்றும் பல சமூக வலைதளத்தில் முக்கிய அரசியல்வாதியுடன் தினமும் தொலைபேசியில் பேசியதாகவும் திருமணத்தினை செய்தால் பல ஆதாரங்களை கொடுத்து திருமணத்தை தடைசெய்து அசிங்கப்படுத்துவதாக மிரட்டியதாகவும் தொடர்ந்து செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து பார்த்தால், V.J.சித்ரா கடந்த மாதம் என்னிடம், ”சில கடன்களை உடனடியாக அடைத்துவிட்டு சுதந்திரமாக இருக்கவேண்டும்,” என்று கூறியது நினைவிற்கு வருகிறது.
அதாவது V.J.சித்ரா சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை மற்றும் TRP ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளார் என்பதனால் அவர் மேல் முதலீடு செய்த மற்றும் பழக்கம் உள்ள பெரியநபர்கள, சினிமாநபர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். தற்பொழுது திருமணம் நடந்தால் அந்த பிரபலம் குறைய தொடங்கி விடும் என்பதால் ஒரு சில நபர்களால் மிரட்டல் வந்திருக்கலாம் என்று நான் சந்தேகப்படுகின்றேன். அதுமட்டுமல்லாமல் ஒரு சில சமூக வலைதளத்தில் V.J.சித்ரா தங்கியிருந்த Pleasant Stay Hotel-லில் உள்ள CCTV கேமராவில் பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆகையால் அது சம்பந்தமாகவும் எனக்கு சந்தேகம் வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒரு சில தொலைபேசி எண்கள் வந்தால் பதட்டத்துடன் தனியாக சென்று பேசுவார் என்றும் அந்த எண்களை அழித்தும்விடுவார் என்றும் என் மகன் தற்போது என்னிடம் கூறினார்.
V.J.சித்ராவின் தொலைபேசியில் தொடர்ந்து யார்யாரெல்லாம் பேசியுள்ளார்கள் என்ற விவரங்களை சேகரித்து அதனடிப்படையில் V.J.சித்ரா திருமணம் செய்தால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி மிரட்டிய நபர்களையும் கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, பல தகவல்கள் சமூக வலைதங்களில் தொடர்ந்து வருவதினால் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்று விட்டுவிட முடியவில்லை. ஆகையால், அதனை சென்னை மாநகர காவல்துறை ஆணையாளராகிய தாங்கள் விசாரிக்க வேண்டும். மேலும், தங்களுடைய விசாரணையில் நாங்கள் எந்தவிதத்திலும் தலையிடும் செய்யக்கூடாது என்று தெரிந்தமையால், எனக்கு ஏற்படும் சந்தேகங்களையும் என்னுடைய கருத்துக்களையும் தங்களிடம் புகாராக சமர்ப்பிக்கிறேன்" என்று அந்த புகாரில் கூறியுள்ளார், ரவிச்சந்திரன்.
ஹேம்நாத்தின் வழக்கறிஞர் இந்த தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.