தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின் முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன்.23ம் தேதி மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் நாசர், விஷாலின் பாண்டவர் அணியினரும், பாக்யராஜ், ஐசரி கணேஷின் சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பிரபலங்கள் பலரும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். தேர்தலில் பதிவான வாக்குகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், துணைநடிகர் பெஞ்சமின் தாக்கல் செய்த மனுவில், இந்த தேர்தலில் தன்னை ஓட்டு போட அனுமதிக்கவில்லை என்றும், தபால் மூலம் ஓட்டு போடுவது என்பது விருப்பத்தின் அடிப்படையில் தான். அது கட்டாயம் கிடையாது. தபால் ஓட்டு படிவம் தேர்தலுக்கு முதல் நாள் வரை வந்தடையவில்லை. தபால் மூலமும், நேரடியாகவும் ஓட்டு போட முடியாத நிலை பல உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல், ஏழுமலை என்பவர் தொடர்ந்த வழக்கில் நடிகர் சங்க நிர்வாகிகள் , பதவிக்காலம் முடிந்த நிலையில் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு இந்த தேர்தலை நடத்தியது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். சிவில் வழக்காக தொடரப்பட்ட இவ்வழக்கு உயர்நீதி மன்ற நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது .
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். ஏற்கனவே நடிகர் விஷால் தொடர்ந்த ரிட் வழக்கில் வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டாலும், முடிவுகளை வெளியிட கூடாது என்று தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணை ஆகஸ்ட்.8ம் தேதிக்கு ஒத்திவைத்து, விஷால் உள்ளிட்டோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.