நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இந்த ட்வீட் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
Also Read | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள்.. ஒரே வரியில் வாழ்த்தி அசத்திய நடிகர் தனுஷ்..
இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினி காந்த். 1975 ஆம் ஆண்டு மறைந்த இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார் ரஜினி காந்த். அதன்பிறகு வெற்றிப் படிக்கட்டில் பயணிக்க துவங்கிய ரஜினி காந்த் தற்போது இந்திய சினிமாவின் ஐகான்களில் ஒருவராக அறியப்படுகிறார்.
ரஜினி காந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் அடுத்த 169வது படமான ஜெயிலர் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தினை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 12) சூப்பர் ஸ்டார் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து கேக் வெட்டி, கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள். இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில்,"செப்பு மிங்கிளாகி வரும்
தங்கம் அல்ல அவர்... எப்பவுமே சிங்கிளாக வரும் சிங்கம்!! சூப்பர் மனிதர் திரு. ரஜினி காந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த அற்புத கலைஞனின் பெயரை காற்றில் அல்ல காலத்தில் எழுதி வைத்துள்ளது கலை. நீடூழி வாழ்க தலைவா" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ள ஹர்பஜன் அவ்வப்போது தமிழில் ட்வீட் செய்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவார். சிஎஸ்கே அணிக்காக விளையாடியபோது இவர் போட்ட ட்வீட்கள் பெரும் வைரலாகியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்திற்கு ஹர்பஜன் சிங் தமிழில் வாழ்த்து தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனிடையே அவரது இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
Also Read | சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் பிறந்தநாள்.. வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்..!