நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்த 'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023) அன்று திரையரங்குகளில் வெளியானது.
துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் துணிவு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்துள்ளது.
'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார், இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.
நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலின் H. வினோத் Fans Festival என்ற நிகழ்ச்சியில் இயக்குனர் வினோத் கலந்து கொண்டார். அப்போது துணிவு படம் குறித்து பல கேள்விகளுக்கு வினோத் பதில் அளித்துள்ளார். "உங்கள் குடும்பத்தினர் துணிவு படம் பார்த்த பிறகு என்ன சொன்னார்கள்" என்ற கேள்விக்கு, "எனது அம்மாவுக்கு துணிவு படத்தினை விட வலிமை படம் பிடித்திருந்தது. என் மனைவிக்கு துணிவு ரொம்ப பிடிச்சிருந்தது. அவங்க அஜித் சார் ரசிகை. அதனால் அவங்களுக்கு முதல் பாதி பிடிச்சிருந்தது. இரண்டாவது பாதி, முதல் பாதி போல இருந்திருக்கலாம் என்று அவங்களுக்கு தோன்றியது. பொதுவாக 30 வயதுக்கு மேல் பணக்கஷ்டம் இருப்பவர்களுக்கு இரண்டாம் பாதி பிடித்திருந்தது. இளைஞர்களுக்கு முதல் பாதியும் பிடிச்சிருந்தது" என வினோத் கூறினார்.