நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.
இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. .
இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த படத்திலும் நடித்துள்ளார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார். இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.
துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
சமீபத்தில் வெளியான டிரெய்லர் ரசிகர்கள்தான் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 56 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.
இந்நிலையில் கலைஞர் தொலைக்காட்சி சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை இயக்குனர் வினோத் அளித்துள்ளார். அதில் நடிகர் அஜித் தனக்கு அளித்த அறிவுரை குறித்து பேசியுள்ளார். "சம்பாதிக்கும் பணத்தில் மூன்றில் ஒரு பங்கு அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை கட்டிவிடுங்கள். அது மக்கள் பணம். வரிக்கு என்று தனியாக வங்கி கணக்கு வைத்து கொள்ளுங்கள்.
மொத்தமாக கட்டும் போது ஏற்படும் மிரட்சி இருக்காது. மீதி இருக்கும் பணத்தில் 10% தேவைப்படும் மக்களுக்கு உதவி செய்ய வைத்து கொள்ளுங்கள். மீதி உள்ள பணத்தை வைத்து முதலீடுகள், உங்கள் தேவைகள், குடும்ப செலவுகள், மற்ற எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளுங்கள்" என நடிகர் அஜித் அட்வைஸ் வழங்கியதாக வினோத் கூறியுள்ளார்.