நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்த 'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023) அன்று திரையரங்குகளில் வெளியானது.
'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார், இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.
நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் துணிவு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்துள்ளது.
இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலின் H. வினோத் Fans Festival என்ற நிகழ்ச்சியில் இயக்குனர் வினோத் கலந்து கொண்டார். அப்போது திரைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது குறித்து இயக்குனர் H.வினோத் பேசுகையில்,"அதை எல்லா ஹீரோக்களும் மன அழுத்தம் கொடுக்கக்கூடியதாக நினைக்கிறாங்க. காலம் எப்போதுமே விலைமதிக்க முடியாதது. அவதார் எவ்வளவு பெரிய படம். அதுக்குக்கூட நம்ம அவ்வளவு நேரம் ஒதுக்குறது இல்ல. அவ்வளவு டெக்னீக்கலா நம்ம படம் எடுக்கல. ஆனா, நம்ம படம் பண்ணும்போது அது பற்றிய அறிவிப்பு வரலைன்னா கூட, எப்போ அறிவிப்பு வரும்னு கேக்குறாங்க. அது தொடங்கி நெறய நேரத்தை செலவிடுறோம். அது ஹீரோக்களுக்கு வீட்ல கெட்ட பெயர் வாங்கிக்கொடுக்குற அளவுக்கு ஆகிடுது. அதை பாக்குற அப்பா, அம்மா அந்த ஹீரோ பத்தியே பேசிட்டு இருக்கானே-னு நெனைப்பாங்க. இதுனால யாருக்கும் யூஸ் இல்ல" என்றார்.
தொடர்ந்து, நடிகர் அஜித் தனது ரசிகர்கள் பற்றி பகிர்ந்துகொண்ட விஷயங்கள் குறித்து பேசிய வினோத்,"நிறைய விஷயங்கள் டிஸ்கஸ் பண்ணது இல்ல. அவரு ரசிகர்கள் பத்தி சொல்லும்போது,'Fans-க்கு ஏதோ ஒரு வகையில என்னை பிடிச்சிருக்கு. அவங்களால தான் அஜித்துக்குற ஒருத்தர் பேசப்படுற நடிகரா இருக்கார். அஜித்-னா கிங் ஆஃப் ஓப்பனிங் அப்படிங்குறதையே ரசிகர்கள் தான் கொடுத்திருக்காங்க. அவங்க என்மேல காட்டுற அன்பை நான் எப்படி திருப்பி காட்டுறது? அவங்க நல்லா வாழ்ந்தா தான் அவங்களும் ஜெயிச்ச மாதிரி, நானும் ஜெயிச்ச மாதிரி'-னு சொல்லுவாரு. அதுக்கு அவங்க தங்களோட நேரத்தை சரியா பயன்படுத்திக்கணும்-னு தான் நான் சொல்றேன்" என்றார்.