சூர்யா நடித்து அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய்பீம். த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான இந்த படம் குறித்து பாராட்டுகளும் விமர்சனங்களும் கலவையான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றுக்கு சூர்யாவும், ஏனைய திரைத்துறை சார்ந்தவர்களும் தங்கள் கருத்துக்களையும் விளக்கங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படம் குறித்து செய்தியாளர்களிடையே பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, “ஜெய்பீம் படத்தில் உண்மை சம்பவம் என்று சொல்லப்படுகிறது. ராஜாக்கண்ணுவின் பெயர் ராஜாக்கண்ணு என்றே வைக்கப்பட்டிருக்கிறது. சந்துருவின் பெயர் சந்துருவாகவே இருக்கிறது. ஆனால் அந்தோணிசாமி மட்டும் எப்படி குருமூர்த்தி ஆகிறார்? அந்த இடத்தில் எந்த காலண்டரும் இருக்கக்கூடாது என்று நான் சொல்கிறேன்.
ஆனால் காலண்டர் வைத்தே தீருவேன் என்று நினைத்தால், இயேசுநாதர் காலண்டர் வையுங்கள். மகாலட்சுமி காலண்டர் எப்படி வைப்பீர்கள்? இந்துமதம் என்றால் அவ்வளவு தூரம் நக்கலாக போய்விட்டதா? மகாலட்சுமி காலண்டர் அந்த படத்தில் இருக்கக் கூடாது. அது எடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அதை எப்படி டீல் பண்ண வேண்டும் என்று தெரியும்.
ஏற்கனவே சூர்யாவின் மனைவி ஜோதிகா, கோவிலுக்கு போவதை இழிவாக பேசியிருக்கிறார். நாகூர் தர்காவை பற்றி அவர் பேசியிருக்கலாம். அங்கு போகாதீர்கள், அந்த பணத்தில் நாம் சோசியல் சர்வீஸ் பண்ணுங்கள், வேளாங்கண்ணிக்கு செல்லாதீர்கள் என்று அவர் சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் அப்படி சொல்லலை. ஏனென்றால், அது அவர்கள் மதம். இந்து மதத்தை எப்போதும் சினிமாவில் இருப்பவர்கள் விடமாட்டேன் என்கிறார்கள்.
ராஜராஜ சோழனையும் விடமாட்டேன் என்கிறார்கள்.. ராஜாவையும் விடமாட்டேன் என்கிறார்கள் (சிரிக்கிறார்). அந்த காலண்டர் படத்தை எடுக்க வேண்டும். இந்த படத்தின் மையக் கதை என்ன? லாக்கப் டெத். லாக்கப் டெத் செய்த கொலைகாரன் அந்தோணிசாமி என்ன மதம்? கிறிஸ்தவர். அதனால் அங்கு அந்த படத்தை வைக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை.
அப்படி அவ்வாறு வைக்க வேண்டுமென்றால் இயேசுநாதர் புகைப்படத்தை வையுங்கள் என்று சொல்கிறேன். அவ்வளவுதான். உண்மை சம்பவத்தை இப்படி எல்லாம் மாற்றி திரித்து வன்னிய குல சத்திரியர்களுக்கும் பட்டியல் சமுதாய மக்களுக்கும் சண்டை மூட்டி அதன் மூலம் மதமாற்றம் பண்ணவேண்டும் என்கிற தீய நோக்கத்துடன் வேண்டுமென்றே இப்படி செய்யப்பட்டு இருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறேன்!” என்று தெரிவித்திருக்கிறார்.