ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
'ஜெய் பீம்' திரைப்படத்தின் கதைக்களம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் தமிழகத்தில் 1990களில் நடந்த சம்பவங்களைக் கொண்டு த.செ.ஞானவேல் கதையை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, நடித்துள்ளார் சூர்யா. இந்த படத்தினை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார். ’ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டர் ஃபிலோமின்ராஜா. கலை இயக்குநராக கதிர் பணியாற்றியுள்ளார்.
'ஜெய்பீம்' படத்திற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இயக்குநர் பா ரஞ்சித் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்திற்கு ஏராளமான பிரபலங்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படம் பற்றி பாஜக பிரமுகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எச். ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்துள்ளார், அதில் "நம் குழந்தை 3 மொழி படிக்கக் கூடாது என்றவர் தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவாராம். சுயநலமிகளை புரிந்து கொள்வோம்." என குறிப்பிட்டுள்ளார். இந்த டிவீட்டுக்கு நடிகர் சூர்யா லைக் இட்டுள்ளார். எச் ராஜாவுக்கு பதில் தராமல் லைக் மட்டும் இட்டுள்ளதை சூர்யா ரசிகர்கள் மட்டுமல்லாது பொது ரசிகர்களும் ஸ்கிரின் ஷாட் எடுத்து பகிர்ந்துவருகின்றனர்.