இயக்குநர் எழில் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் புதிய படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஈஷா ரெபா, சாக்ஷி அகர்வால், நிகிஷா பட்டேல் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், சதீஷ், ஆடுகளம் நரேன், வையாபுரி, மனோபாலா, கோவை சரளா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பல மொழிகளில் திரைப்படங்கள் தயாரித்து வரும் ரமேஷ் பி.பிள்ளை வழங்கும் அபிஷேக் ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சி.சத்யா இசையமைக்கிறார். எழில் பார்முலா எப்படியோ அப்படியே தான் இந்த படமும் காமெடி சப்ஜெக்ட்டில் உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் கிளைமேக்ஸ் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரான கனல் கண்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரது ட்வீட்டின் மூலம் இப்படத்தின் தலைப்பு குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இப்படத்திற்கு ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. கடந்த 1978ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லதா, விஜயகுமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஹாரர் படம் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்பது குறிப்பிடத்தக்கது.