விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான், சிம்பு மற்றும் கௌதம் மேனன் ஆகிய மூவர் கூட்டணி அடுத்து இணையும் படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு’ என பெயரிடப்பட்டுள்ளது. மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு இந்த படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். கவிஞர் தாமரை பாடலாசிரியராக ஒப்பந்தமாகியுள்ளார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிகின்றனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.
கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே நான் கடவுள், அங்காடி தெரு, 2.O, பாபநாசம், சர்கார், இந்தியன்-2, பொன்னியன் செல்வன், விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் ஆரம்பமானது. முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த தருவாயில் படக்குழு சென்னை திரும்பியது. இந்நிலையில் சிம்புவுக்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இன்று நீக்கி இருந்தது. இவ்வேளையில் இன்றுமுதல் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குவதாக சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.