நடிகர் சிம்பு நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி உள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'.
இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மேலும், கதாநாயகனாக நடித்துள்ள சிம்பு, 'முத்து' எனும் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இந்த படத்திற்காக இணைந்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, 02.09.2022 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த விழா நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ரசிகர்கள் முன்னிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் இசை மற்றும் டிரெய்லர் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
இந்த விழாவில் பேசிய கௌதம் மேனன் இந்த திரைப்படம் உருவான கதையை சொல்லி இருக்கிறார். அதன்படி, "ஒரு முற்றிலும் மாறுபட்ட கதை களத்துடன் எழுத்தாளர் ஜெயமோகன் வந்தார். இந்த படத்தில் ஃபிரஷ்ஷான நடிகர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்த போது, சிம்புவையே ஃபிரஷ்ஷாக களம் இறக்குவோம் என்று கூறி முடிவு செய்தோம். இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மானை அணுகியபோது, அந்த நேரத்தில் அவரும் நானும், ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ திரைப்படத்திற்காக பணிபுரிந்து கொண்டிருந்தோம். இதனால், அந்த படத்துக்காக இசை அமைத்திருந்த பாடல்களையே நான் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறினேன்.
அவரோ பரவாயில்லை, நானும் ஃப்ரஷ்ஷாக பாடல்களை கம்போஸ் செய்து தருகிறேன் என்று கூற, அதிக பாடல்கள் தேவைப்படாத இந்த கதை களத்தில் ரஹ்மான் சொன்ன இடங்களில் புதிய காட்சிகளை அவருடைய ஆலோசனைப்படி சேர்த்து, அவருடைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதை பார்த்த சிம்பு, நானும் வேற மாதிரி ரெடி ஆகிட்டு வரேன் என்றார். அப்படித்தான் இந்த திரைப்படம் உருவானது. நிஜ வாழ்க்கை கதையை தழுவி எடுக்கப்படுகிறது வெந்து தணிந்தது காடு. ஆனால் ஒரிஜினல் கதையில் காதல் இல்லை. படத்தில் காதல் சேர்ந்திருக்கிறது. இந்த கதை களத்தில் கார்த்தியும் நானே ஜெஸ்ஸியும் நானே!” என்று கெளதம் மேனன் பேசியிருக்கிறார்.