இந்திய அரசு ஆண்டு தோறும், நாடு முழுவதும் வெளியாகும் மிகச் சிறந்த திரைப்படங்கள் மற்றும் படைப்புகளுக்கு விருதுகள் வழங்கி, கலைஞர்களை பாராட்டி, அவர்களை கவுரப்படுத்தும் வகையில் தேசிய விருதுகளை அளித்து வருகிறது.
Also Read | "தனுஷ்க்கு செட் ஆகுற சூப்பர் ஹீரோ??.." Russo Brothers சொன்ன அசத்தலான பதில்.. Behindwoods 'Exclusive'!!
சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உள்பட பல்வேறு கலைகளில் சிறப்பாக திரைப்படங்களுக்கு பங்காற்றிய கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.
இதற்கு முன்பு வழங்கப்பட்ட தேசிய விருதில், தமிழ் சினிமா சார்பில், நடிகர் தனுஷ், விஜய் சேதுபதி, இயக்குனர் வெற்றி மாறன், இசை அமைப்பாளர் டி. இமான், நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் உள்ளிட்ட பலரும் விருதுகளை வாங்கி இருந்தனர்.
இந்நிலையில், தற்போது சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விவரம் டெல்லியில் வெளியிடப்பட்டுள்ளது. திரைப்படத் துறைக்கான சாதகமான மாநில விருது மத்திய பிரதேச மாநிலத்திற்கு அறிவிக்கப்பட்டது. அதே போல, இதன் சிறப்பு விருது, உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ் சினிமாவில், சுதா கொங்காரா இயக்கத்தில், சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி நடித்திருந்த 'சூரரைப் போற்று' திரைப்படம், அறிமுக இயக்குனர் மடோனே அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருந்த 'மண்டேலா', வசந்த் இயக்கி இருந்த 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' உள்ளிட்ட திரைப்படங்கள் ஏராளமான விருதுகளை அள்ளி இருந்தது.
இதில், சூரரைப் போற்று திரைப்படம், மொத்தம் ஐந்து தேசிய விருதுகளை வென்று அசத்தி உள்ளது. சிறந்த நடிகர் விருது சூர்யாவுக்கும், சிறந்த நடிகை விருது அபர்ணா பாலமுரளிக்கும், சிறந்த திரைக்கதை, சிறந்த Feature Film மற்றும் சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட ஐந்து தேசிய விருதுகளை வாங்கி உள்ளது.
முன்னதாக, தேசிய விருது அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, சூர்யா மற்றும் சூரரைப் போற்று திரைப்படத்திற்கு தேசிய விருதுகள் கிடைக்கும் என நெட்டிசன்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர். அந்த வகையில், தற்போது மொத்தம் 5 தேசிய விருதுகளையும் சூரரைப் போற்று திரைப்படம் வென்றுள்ளது.
இதில், ஹைலைட் விருதாக பார்க்கப்படுவது, இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பின்னணி இசைக்கான தேசிய விருதை வென்றது தான். இதற்கு காரணம், முந்தைய தேசிய விருதுகளின் போது, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த ஆடுகளம், அசுரன் உள்ளிட்ட திரைப்படங்கள் தேசிய விருதினை வென்ற போதும், அவருக்கு தேசிய விருது கிடைக்கவில்லை.
அது மட்டுமில்லாமல், இது தவிர பல தரமான பாடல்களை ஜி.வி. பிரகாஷ் குமார் உருவாக்கி இருந்த சமயத்தில், அவருக்கு இந்த முறை தேசிய விருது கிடைக்கும் என்றே ஒவ்வொரு முறையும் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், கடைசியில் நடக்கமாலே போனது. அப்படி இருக்கையில், 68 ஆவது தேசிய விருதுகள் பட்டியலில், சிறந்த பின்னணி இசைக்காக ஜி.வி. பிரகாஷ் குமார் விருது வாங்கி உள்ளதால், ரசிகர்கள் கடும் உற்சாகத்தில் உள்ளனர்.
நீண்ட நாள் காத்திருப்புக்கு தற்போது விடை கிடைத்து விட்டது என்றும் கூறி, ஜி.வி. பிரகாஷ் குமாரையும் பாராட்டி வருகின்றனர். இது தொடர்பாக இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தன்னுடைய ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "ஒரு நாள் நீங்கள் பெரிதாக சாதிப்பீர்கள். ஒரு நாள் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். ஒரு நாள் நீங்கள் நினைத்தபடி எல்லாம் நடக்கும். நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு, இறுதியாக அந்த நாள் வந்து விட்டது" என குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தனது குடும்பத்தினர் அனைவருக்கும், சூரரைப் போற்று திரைப்பட குழுவினருக்கும் தனது நன்றிகளை அவர் தெரிவித்துள்ளார்.
Also Read | சிறந்த தமிழ் படம், கூடவே 2 National Award.. இயக்குநர் வசந்த்-ன் "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்"