‘வடசென்னை’ படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் ‘அசுரன்’ திரைப்படத்தின் இசை குறித்து ரசிகர் எழுப்பிய கேள்விக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பதில் அளித்துள்ளார்.
கலைப்புலி எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை தழுவி உருவாகவிருக்கும் இப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறுகிய காலத்திற்குள் ஷூட்டிங் பணிகளை முடித்து படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
‘பொல்லாதவன்’, ‘மயக்கம் என்ன’, ‘ஆடுகளம்’ திரைப்படங்களை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் ‘அசுரன்’ திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில், ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் வரும் ‘ஒத்த சொல்லால’ பாடலை போன்று அசுரன் படத்திலும் பாடல் இருக்கிறதா என ரசிகர் ஒருவர் ஜி.வி.பிரகாஷிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு ‘இருக்கு’ என பதிலளித்த அவர், தற்போது அசுரன் படத்தின் இசை ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களில் அடுத்தடுத்த அப்டேட்கள் காத்திருக்கிறது என தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பதிலளித்துள்ளார்.
இது ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 71வது திரைப்படமாகும். வெற்றிக் கூட்டணியான தனுஷ்-வெற்றிமாறன்-ஜி.வி.பிரகாஷின் அசுர கூட்டணி மீது அதிக எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.