பாலா சூர்யா இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று காலை வெளியானது. இன்று முதல் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.
பாலா சூர்யா இணைந்த நந்தா, பிதாமகன்….
சூர்யாவின் ஆரம்பகால திரையுலக வாழ்வில் அவருக்கு முக்கியமான படங்களாக அமைந்தவை பாலாவின் நந்தாவும், பிதாமகனும், இந்த இரு படங்களிலும் தன் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சூர்யா. அது ரசிகர்களிடம் பரவலாக பாராட்டுகளைப் பெற்றது. நந்தாவில் கோபமான முரட்டு இளைஞன் வேடம் என்றால் பிதாமகனில். நந்தாவுக்கு நேர் எதிரான நகைச்சுவை ததும்பும் பாத்திரத்தில் இந்த படத்தில் சூர்யாவை நடிக்க வைத்து அவரின் மற்றொரு பரிணாமத்தை வெளிக்கொண்டு வந்தார் பாலா. இடையில் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் சூர்யா ஒரு கௌரவ வேடத்திலும் நடித்திருந்தார்.
மீண்டும் இணைந்த கூட்டணி
இயக்குநர் பாலா இயக்கத்தில் கடைசியாக ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் திரையரங்கில் வெளியான நாச்சியார் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படத்தை பாலா இயக்க உள்ளார். இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.
சூர்யாவின் நெகிழ்ச்சி டிவீட்…
இன்று சூர்யா தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதில் ’18 ஆண்டுகளாக எனது குரு பாலா அண்ணன் ஆக்ஷன் சொல்ல காத்திருந்தேன். இன்று அது நடந்ததில் மகிழ்ச்சி. உங்கள் அனைவரின் வாழ்த்துகளும் வேண்டும்’ எனக் கூறி சூர்யா 41 பட அறிவிப்பையும், இயக்குனர் பாலாவோடு இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
படத்தில் இணைந்த முன்னணிக் கலைஞர்கள்…
இதையடுத்து இப்போது படத்தின் இசையமைப்பாளராக ஜி வி பிரகாஷும், ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியமும் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி வி பிரகாஷ் ஏற்கனவே இயக்குனர் பாலாவின் பரதேசி படத்துக்கு இசையமைத்துள்ளார். மேலும் அவர் இயக்கிய நாச்சியார் படத்தில் நடித்தும் உள்ளார். அதுபோலவே பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் பாலசுப்ரமணியம் என்பது குறிப்பிடத்தக்கது. இது சம்மந்தமான போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் இப்போது அவை வைரலாக பரவி வருகின்றன.