இந்த வாரத்தின் மிகவும் டிரெண்டிங்கான பரபரப்பு பேச்சாக இருந்துவந்தது ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டுக்கு செல்கிறாரா இல்லையா என்கிற கேள்விதான்.
யூடியூப் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து, தனக்கு வரும் கடிதங்களை படித்து, அதற்கு, தனக்கே உரிய வட்டார வழக்கு மொழியில் கமெண்டுகளை கொடுப்பதன் மூலம் பிரபலமானார். தற்போது ஜி.பி.முத்து பல திரைப்படங்களிலும் நடிப்பதாக கூறப்படும் நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாரா என்று சமீபத்தில் பேச்சுகள் எழுந்தன.
அத்துடன் ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலானது. இதனை அவரே தம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதனையடுத்து ஜி.பி.முத்து, பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் பங்கேற்கிறார் என்று பலரும் பேசி வந்தனர். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் 4 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் நடிகர் ஆரவ் வெற்றி பெற்றார். 4வது சீசனில் நடிகர் ஆரி வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் பெருத்த எதிர்பார்ப்புடன் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனுக்கான புரோமோக்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில்தான் ஜி.பி.முத்து, தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா இல்லையா என்பது பற்றிய விளக்கத்தை அவரே வீடியோ மூலமாக தெரிவித்திருக்கிறார். அந்த வீடியோவில், “பிக்பாஸ் வீட்டுக்குள் நான் இருப்பது பற்றி நானே யோசித்து தான் சொல்ல வேண்டும். ஏன் என்றால் மொபைல் இல்லாமல் ஒரு நாள் கூட என்னால் இருக்க முடியாது.
இதேபோல் என்னுடைய குழந்தைகளை பார்க்காமலும் என்னால் இருக்க முடியாது. எத்தனை தடைகள் வந்தாலும் எனக்கு, என்னுடைய மனைவியும் குழந்தைகளும்தான் முக்கியம். அவர்களை பார்க்காமல் என்னால் இருக்கவே முடியாது!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதை பார்த்த பலரும் இந்த மனிதர் குடும்பத்தின் மீது இவ்வளவு பாச உணர்வு கொண்டவரா? என நெகிழ்ந்து பேசி வருகின்றனர்.