துல்கர் சல்மானின் நடிப்பில் கடைசியாக குருப் படம் கடந்த நவம்பர் 12 அன்று வெளியானது.
ஒரே சமயத்தில் 5 மொழிகளிலும் வெளியான 'குருப்'. உலகளவில் 75 கோடி ரூபாய் வசூலைக் கடந்து சாதனை புரிந்தது. முதல் வாரத்தில் மட்டும் 43.35 கோடி ரூபாய் வசூல் செய்தது. இது துல்கர் சல்மானின் முந்தைய படங்களின் வசூலை விட அதிகமாகும். இதன் மூலம் துல்கர் சல்மான் நடித்த படங்களில் அதிக வசூல் செய்த படமாக குரூப் உருவெடுத்தது. இந்த படத்தை அடுத்து ரோஷன் ஆண்ட்ரு இயக்கத்தில் சல்யூட் படத்தில் போலிசாக நடித்து முடித்துள்ள துல்கர், சல்யூட் படத்தின் பிப்ரவரி வெளியீட்டுக்கு காத்திருக்கிறார்.
இதற்கடுத்து துல்கரின் மற்றுமொரு புதுப்படமாக "ஓதிரம் கடஹம்" படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இந்த படத்தை மலையாள பட உலகில் முன்னணி நடிகரான சவுபின் சாகிர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே துல்கரை வைத்து 'பறவ' படத்தை இயக்கியவர் ஆவார். இந்த படத்தை துல்கர் சல்மானே தயாரிக்கிறார். இதற்கிடையில் தெலுங்கிலும், தமிழிலும் தலா ஒரு படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். பெயரிடப்படாத அந்த தெலுங்கு படத்தில் லெப்டினன்ட் ராம் எனும் ராணுவ வீரர் வேடத்தில் நடித்துள்ளார் துல்கர், இந்த படத்தை ஹனு ராகவபுடி இயக்குகிறார் . கீர்த்தி சுரேஷின் 'மகாநதி' படத்தில் ஜெமினி கணேசனாக நடித்த பிறகு தெலுங்கில் துல்கரின் இரண்டாவது படம் இதுவாகும். இந்த படத்திற்கு இந்தியாவின் தலைச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான P. S. வினோத் ஒளிப்பதிவு செய்கிறார்.
தமிழில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் 'ஹே சினாமிகா' படத்தை நடன இயக்குனர் பிருந்தா இயக்குகிறார். துல்கருடன் காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைத்ரி நடிக்கின்றனர். இந்த படத்திற்கு 96 படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. துல்கர் சல்மானின் 33வது படமாக இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று (21.12.2021) வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. JIO ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.