கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கோலிசோடா. இந்த படத்தை விஜய் மில்டன் இயக்கியிருந்தார். அருணகிரி இசையமைத்திருந்தார்.
விளிம்பு நிலையில் இருந்த பதின்பருவ வயது நண்பர்கள் இணைந்து தங்களுடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள்? இறுதியில் என்ன ஆனது? என்பதை காமெடி மற்றும் எதார்த்தம் கலந்து இயக்குனர் விஜய் மில்டன் இயக்கிய இந்த திரைப்படம் பெருவாரியான ரசிகர்களால் பரவலான பாராட்டை பெற்றதுடன் விமர்சன உலகிலும் நல்ல மதிப்புகளை பெற்றது.
இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பதின்ம வயது நடிகர்கள் அனைவருமே தற்போது வளர்ந்து விட்டனர். இப்போது மீண்டும் கோலிசோடா 1.5 திரைப்படம் உருவாகி வருகிறது. கோலி சோடா முதல் பாகத்திலேயே முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக வந்தவர் நடிகை ‘வான்மதி’ சீதா. உருவகேலியை எதிர்கொள்பவர்களுக்கு மத்தியில் மேலும் தன்னம்பிக்கை கொடுக்கும் கதாபாத்திரமாக அமைந்த இந்த வான்மதி கதாபாத்திரத்தை ஏற்ற சீதா, தானும் அவ்வாறே திரைப்படங்களில் தொடர்ந்து இயங்கி வந்தார்.
இந்த நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் தளத்தின் சார்பாக அவரை நேர்காணல் செய்யும் பொழுது Ray's Studio அழகு நிலையத்தில் அவருக்கு ஒப்பனைகள் செய்யப்பட்டன. ஒப்பனை இன்றியே எல்லா திரைப்படங்களிலும் நடித்து வந்தாலும் சீதா, இந்த அனுபவம் புதிதாக இருந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் இந்த நேர்காணலின் போது விக்ரம் & சமந்தாவுடன் நடித்த 10 எண்றதுக்குள்ள திரைப்படத்தின் அனுபவத்தை பகிர்ந்த நடிகை சீதா, “நான் சமந்தா எல்லாம் நம்மிடம் பேசுவார்களா? என்று தயங்கினேன். ஆனால் சூட்டிங்கின்போது அவரே என்னிடம் வந்து பேசினார். விக்ரம் சாரும் அப்படித்தான். நடிப்பது என்பதே எனக்கு கனவாக இருக்கும் பொழுது, இவர்களுடன் நடிப்பது என்பது நான் நிச்சயமாக எதிர்பாராதது. இப்போது ஒரு திரைப்படத்தில் நாயகியாக நடித்திருக்கிறேன். அதுவும் சர்ப்ரைஸாக இருந்தது.
அந்த படத்தில் மட்டும்தான் எனக்கு மேக்கப் போடப்பட்டது. மற்ற திரைப்படங்கள் எதிலும் எனக்கு மேக்கப் போட்டதில்லை. நான் அப்படியே இருப்பதையே அவர்கள் விரும்பினார்கள். அதுதான் என் கதாபாத்திரத்துக்கு பலம் என்று கூறுவார்கள். இருப்பினும் சினிமாவில் மேக்கப் என்பது அத்தியாவசியமாக இருக்கிறது. தற்போது மேக்கப் போட்ட பிறகு நான் வேறு மாதிரி இருக்கிறேன்” என்று குறிப்பிட்டார். வான்மதி சீதாவுக்கு, அழகுக் கலை நிபுணர் ரம்யா, Ray's Studio சார்பில் பிஹைண்ட்வுஸ் நேர்காணலில் ஒப்பனை செய்ய ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.