இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், நடிகர் மற்றும் பன்முகக் கலைஞர் கமல்ஹாசனுக்குமான நட்புறவு கலை உலகம் மட்டுமல்லாமல் ரசிகர்களின் உலகமும் அறிந்தது.
நடிகர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் நடித்துள்ள பெரும்பாலான திரைப்படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். அவற்றில் பல பாடல்களை கமல்ஹாசன் பாடியிருக்கிறார். சில பாடல்களை கமல்ஹாசன் எழுதி இருக்கிறார். இன்னும் கமல்ஹாசனின் சில பாடல்களை பல்லவியின் முதல் வரிக்கு இளையராஜா அடி எடுத்துக் கொடுத்திருக்கிறார்.
கமல்ஹாசன் நடித்த ‘மைக்கேல் மதன காம ராஜன்’ திரைப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்த பிரபல பாடலான, ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடல் தற்போது சந்தானம் நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான ‘டிக்கிலோனா’ திரைப்படத்தில் ரீமிக்ஸ் பாடலாக இடம் பெற்றதை, அடுத்து இந்த பாடல் அண்மை காலமாக வைரலானது. இந்த மெகா ஹிட் பாடல் இளையராஜா & கமல் காம்போ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்புகையில் அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவர் பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சென்னை போரூரில் இருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் கமல் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்றுவரும் கமல்ஹாசனுக்கு சுவாசப் பாதையில் தொற்று ஏற்பட்டதாகவும், அவருக்கு காய்ச்சல் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டிருந்தது. மேலும் சீராக இருக்கும் அவருடைய உடல்நிலை மருத்துவமனை நிர்வாகத்தால் கண்காணித்து வரப்படுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனிடையே நடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன், கமல்ஹாசனின் உடல்நிலை தேறி வருவதாக குறிப்பிட்டிருக்கிறார். இந்த நிலையில் இசையமைப்பாளரும், நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரும், அவருடன் பல திரைப்படங்களில் பணிபுரிந்தவருமான இசைஞானி இளையராஜா கமல்ஹாசன் நலம் பெற வேண்டும் என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
அதன்படி தம் ட்விட்டரில் இளையராஜா, “நலமாக வரவேண்டும் சகோதரரே ... கலை உலகை ஆ……….ஹா…………என ஆச்சரியப்பட வைக்க வேண்டும் வாருங்கள் சீக்கிரம்.” என் குறிப்பிட்டு ட்வீட் பகிர்ந்துள்ளார். முன்னதாக நடிகர் கமல்ஹாசன் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் போனில் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.