நடிகர் ஆர்யா சமூக வலைதளம் மூலமாக தன்னிடம் பழகி திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக ஜெர்மனியைச் சேர்ந்த விட்ஜா என்ற பெண் புகார் அளித்திருந்தார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 10 ஆம் தேதி இந்த விவகாரத்தில் ஆர்யாவை நேரில் அழைத்து விசாரித்தனர். ஆனால் புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் அவரது மைத்துனர் முகமது ஹுசைனி பையாக் ஆகியோர் தான் ஆர்யாவின் பெயரில் மோசடியில் ஈடுபட்டார்கள் என தெரியவந்ததை அடுத்து மத்திய குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்.
அத்துடன் ஆர்யாவிற்கும் இவ்வழக்குடன் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவித்தனர். இதனிடையே கைதானவர்கள் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, இன்னொருபுறம் ஜெர்மனி பெண் தரப்பு வழக்கறிஞரான ஆனந்தன், ஆர்யா போல் நடித்து மோசடியில் ஈடுபட்டதாக கைதானவர்க்ள் இருவரும் 3வது மற்றும் 4 ஆவது குற்றவாளிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல் குற்றவாளியாக ஆர்யா என்றும், இரண்டாவது குற்றவாளி ஆர்யாவின் தாயார் என்றும் ஜமீலாவின் முதல் தகவல் அறிக்கையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சேர்த்துள்ளதாகவும், ஆனால் அவர்கள் இன்னும் கைது செய்யாமல் இருப்பதாகவும் ஆனந்தன் தெரிவித்தார்.
6 மாதங்களுக்கு முன்பு ஆர்யா மீது, ஜெர்மனி பெண் மோசடி புகார் அளித்த நிலையில், தன்னை போல நடித்து ஏமாற்றியதாக ஆர்யா யார் மீதும் ஒரு புகாரும் அளிக்கவில்லை என்றும், குறிப்பாக ஜெர்மனி பெண்ணிடம் ஆர்யா வீடியோ காலில் பேசிய ஆதாரங்களை வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் கேட்டு கடிதம் எழுதி இருப்பதாகவும், ஆர்யா பேசிய மெசேஜ்களை நீதிமன்றத்தில் சமர்பித்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மற்றும் சைபர் பிரிவு போலீஸார் தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ விளக்கம் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.