நடிகர் விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 67' படத்தில் நடிப்பது குறித்து இயக்குனர் கௌதம் மேனன் முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.
கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய். இளைய தளபதி & தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.
நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்' படத்தில் விஜய் கடைசியாக திரையில் காணப்பட்டார். பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது. Beast படத்திற்கு பிறகு 'வாரிசு' படத்தில் விஜய் நடிக்கிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திரா & தெலுங்கானா மாநில நகரங்களில் நடந்து வருகிறது.
வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படம் கேங்ஸ்டர் வகைமையில் உருவாக உள்ளது என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.
இந்த படத்தின் ஆரம்பக் கட்ட முன் தயாரிப்பு பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். தற்போது கர்நாடக மாநிலம் மைசூரில் இந்த படத்தின் எழுத்து வேலைகள் துவங்கப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன் இயக்குனர் ரத்னகுமாருடன் லோகேஷ் கனகராஜ் இருக்கும் புகைப்படம் வெளியானது. மேலும் சமீபத்தில் 'ஜில் ஜங் ஜக்' இயக்குனர் தீரஜ், இணை எழுத்தாளராக 'தளபதி 67' படத்தில் இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன், வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸை ஒட்டி ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். குறிப்பாக " 'தளபதி 67' படத்தில் நடிக்கிறீங்களா?" என்ற கேள்விக்கு, "லோகேஷ் கூப்பிட்டாரு.. கூப்பிட்டு இந்த மாதிரி ஒரு ரோல் இருக்கு.. பண்ணுங்க அப்படினு சொன்னாரு.." என கௌதம் மேனன் பதில் அளித்துள்ளார்.