தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ திரைப்படம் 3 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் இன்று (நவ.29) ரிலீசாகியுள்ளது.
முதன் முறையாக இயக்குநர் கவுதம் மேனன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு நிலவிய நிலையில், சில காரணங்களால் திரைப்படம் ரிலீசாவதில் சிக்கல் நீடித்து வந்தது. தற்போது இப்படத்தின் சிக்கல் தீர்க்கப்பட்டு திரைப்படம் வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் கடந்த 3 ஆண்டுகளாக எதிர்ப்பார்ப்பை கூடுதலாக்கி வைத்திருந்த ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’வின் FDFSஐ தனுஷ் ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர். இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் இன்று காலை 8.45 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட முதல் காட்சியை ரசிகர்களுடன் காண வந்திருந்தார்.
அங்கு அவரை சூழ்ந்துக் கொண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும், அவருடன் செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர். நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பை பார்த்து இயக்குநர் கவுதம் மேனன் ஆனந்த கண்ணீர்விட்டுள்ளார்.
இப்படம் ரிலீசாக மிக முக்கிய காரணமான வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனர் ஐசரி கணேஷிற்கும், ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கும் இயக்குநர் கவுத, மேனன் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். அதேபோல், படத்தின் நாயகன் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து உறுதியான தகவல் கிடைத்ததில் மகிழ்ச்சி. ரசிகர்களின் வரவேற்பை காண ஆவலுடன் இருப்பதாக ட்வீட் செய்திருந்தார்.