தமிழ் சினிமாவில் காலம் கடந்தும் ரசிகர்கள் கொண்டாடும் சில திரைப்படங்களில் ‘கரகாட்டக்காரன்’ என்ற காமெடி கிளாஸிக் படத்திற்கு ஒரு முக்கிய இடமுண்டு.
இயக்குநர் கங்கை அமரன் இயக்கத்தில் கடந்த 1989ம் ஆண்டு வெளியான ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் சுமார் 500 நாட்கள் வரை திரையரங்குகளில் ஓடி பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனை பெற்று வெற்றியடைந்தது.
விஜயா மூவீஸ் தயாரித்த இப்படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, சந்திரசேகர், சண்முகசுந்தர, காந்திமதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.
இசைஞானி இளையராஜா இசையமைத்த இப்படத்தின் பாடல்கள், பின்னணி இசைக்கு இருக்கும் மவுசு இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் குறையவே இல்லை. இப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆன போதிலும், இந்த படத்தின் காமெடி காட்சிகளை ரசிக்காதவர்களே இருக்க முடியாது.
இந்நிலையில், இப்படத்தின் 2ம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் இயக்குநர் கங்கை அமரன் தீவிரம் காட்டி வருகிறார். இது குறித்து இயக்குநர் கங்கை அமரனை தொடர்புக் கொண்டு பேசுகையில், ‘கரகாட்டக்காரன் 2 படத்தை இயக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. உடல்நிலை காரணமாக கவுண்டமணி இன்னும் உறுதியாகவில்லை. ராமராஜனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அவர் ஒப்புக் கொண்டால், இன்றைய தலைமுறையினர் நடிக்கும் கரகாட்டக்காரன் 2 படத்தில் கெஸ்ட் ரோலில் ராமராஜன் நடிப்பார்’ என தெரிவித்தார்.
இதையடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.