நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக ஆறு முன்னாள் நீதிபதிகள், தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் சூர்யா மாணவர்களின் கல்விக்கும் தனது அகரம் அறக்கட்டளை மூலம் தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறார்.
இதனிடையே தமிழகத்தில் நீட் தேர்வால் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை குறித்து, சூர்யா ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர் நீட் தேர்வு முறையை விமர்ச்சித்திருந்தது, பல விவாதங்களை கிளப்பியுள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டிருப்பதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு தரப்பில் இருந்து குரல்கள் எழுந்தன.
இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக ஆறு முன்னாள் நீதிபதிகள், தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். முன்னாள் நீதிபதிகளான கே.சந்துரு, கெ.என்.பாஷா, டி.சுதந்திரம், கெ.கண்ணன், டி.ஹரி பரந்தாமன், ஜி.எம்.அக்பர் அலி உள்ளிட்டோர் தலைமை நீதிபதி ஏ.பி.சஹி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ''நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தேவையில்லை. இந்த விவகாரத்தை இப்படியே விட்டுவிடுவது நல்லது'' என குறிப்பிட்டுள்ளனர்.