விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. முதல் இரண்டு சீசன்களை போல் நடிகர் கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த சீசன் 16 போட்டியாளர்களுடன் கடந்த ஜூன்.23ம் தேதி தொடங்கியது. முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஃபாத்திமா பாபு முதல் போட்டியாளராக வீட்டை விட்டு வெளியேறினார். அவர் பரிந்துரைத்ததன் பெயரில் அபிராமி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டனாகியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் நடந்துக் கொள்ளும் விதம் குறித்து பிக் பாஸ் ரசிகர்களும், பிரபலங்கள் சிலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், Behindwoods-ன் Second Show வித் நிக்கி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகை காஜல் பசுபதி பிக் பாஸ் 3 பற்றி தனது கருத்தினை பகிர்ந்துக் கொண்டார். அதில், தொடர்ச்சியாக இந்த சீசனை பார்த்து வரும் காஜல், ‘பிக் பாஸ் வீட்டில் லொஸ்லியா ஸ்ட்ரேட்டஜியுடன் விளையாடுகிறாரா என்பது தெரியவில்லை. ஆனால், சாப்பிடும்போது அபிராமி ஏதோ சொல்ல, லொஸ்லியா கோபித்துக் கொண்டு எழுந்துச் சென்றார். பின் அபிராமியை தனியாக அழைத்து பேசுகையில், உங்க 3 பேருக்குள் பிரச்சனை என்றால் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். இதை வெளியில் பார்ப்பவர்கள் தவறாக இருக்கும் என்றார்’.
‘லொஸ்லியா சின்ன பொண்ணாக இருந்தாலும், இங்கு நடக்கும் இந்த விஷயம் மக்களின் பார்வையில் எப்படி தெரியும் என்பதை யூகித்து பேசுவது நல்ல விஷயம் தான். ஆனால், ஒருவர் செய்வது தவறு என்று தெரியும் போது சாண்டியா இருந்தாலும் லொஸ்லியாவாக இருந்தாலும் அந்த இடத்துலேயே பேசினால் நன்றாக இருக்கும்’ என காஜல் கூறினார்.
மேலும், ஆல் இன் ஆல் அழகு ராணி லொஸ்லியா தான் என்றார். கவினுக்கு லொஸ்லியா மீது ஆர்வம் இருப்பது போல் தெரிவதாகவும், பிக் பாஸ் டைட்டிலை சாண்டி பாய் ஜெயிக்க வேண்டும் என்பது தனது ஆசை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.