தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவருக்கென்று தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் கடந்த 2007ம் ஆண்டு பருத்திவீரன் என்ற படம் மூலமாக நாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பருத்திவீரன் படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நடிகர் கார்த்தி இதுவரை ஆயிரத்தில் ஒருவன், பையா, கைதி, கடைக்குட்டி சிங்கம், தீரன் அதிகாரம் ஒன்று, காஷ்மோரா, சுல்தான், சிறுத்தை, கொம்பன் உள்ளிட்ட 23 படங்களில் நடித்துள்ளார்.
கார்த்தி அமெரிக்காவில் இன்ஜினியரிங் படித்தவர். நடிகர் சிவகுமாரின் பையன், சூர்யாவின் தம்பி என சினிமாவில் நுழையும் பொழுதே இவரின் மீது அதிகளவில் எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால், தனது முதல் படத்திலேயே பருத்தி வீரன் கார்த்தி என்ற அடைமொழியை பெற்றார்.
படம் வெளிவந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. இன்றளவும் பருத்தி வீரன் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான இப்படம் அன்றைய தமிழ் சினிமாவை கிராமப்படங்களை நோக்கி கோலிவுட்டை மீண்டும் அழைத்துச் சென்றது.
பருத்தி வீரன் படத்தை பார்த்து விட்டு பாராட்டாத பிரபலங்களே கிடையாது. மேலும், இப்படத்தின் எடிட்டர் ராஜா முகம்மதுவுக்கு சிறந்த படத் தொகுப்பாளருக்கான தேசிய விருது, சிறந்த நடிகைக்கான விருதை பிரியாமணி பெற்றார். இந்நிலையில், #15YearsOfParuthiveeran கொண்டாடும் விதமாக நடிகர் கார்த்தி சமூகவலைதளத்தில் மகிழ்ச்சியான நிகழ்வை பகிர்ந்துள்ளார்.
அதில், "அந்த படத்தின் மூலமாக எனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கியதை நான் பாக்கியமாக நினைக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு அசைவும் அமீர் சாரால் வடிவமைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டது. எல்லாப்புகழும் அவரையே சாரும். கற்றுக்கொண்ட பல பாடங்களில், நான் செய்யும் வேலையில் மூழ்கி மகிழ்வதற்கு அவர் எனக்கு கற்றுக்கொடுத்த விதத்தை நான் இன்னும் பொக்கிஷமாக கருதுகிறேன். இந்த அழகான பாதையில் என்னை அழைத்துச் சென்ற அமீர் சார், ஞானவேல், அண்ணா, எனது அன்பிற்குரிய ரசிகர்கள் மற்றும் ஊகடத்தினருக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது கார்த்தி விருமன் படத்திலும், பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.