நடிகர் அருள்நிதி நடிப்பில் டைரி திரைப்படம் ஆகஸ்டு 26-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் உதவி இயக்குனராக பணியாற்றிய இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார். ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரோன் ஏதன் யோகன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின், “டைரி திரைப்படத்தின் ஸ்கிரிப்ட்டை புரிந்து கொண்டு நடிப்பது பெரிய விஷயம். இந்த கதைக்குள் அவ்வளவு அடுக்குகள் நிறைந்து இருக்கின்றன. அத்தனை கதாபாத்திரங்கள் இருக்கின்றன. அத்தனை கதாபாத்திரத்துக்கும் சம அளவு முக்கியத்துவம் இருக்கின்றன. மிகவும் சுவாரசியமாக எடுத்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தயாரித்த கதிரேசன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இயக்குநருக்கு இது முதல் படம் மாதிரியே தெரியவில்லை.
அருளும் நானும் நிறைய திரைப்படங்கள் ஒன்றாக பண்ணி இருக்கிறோம். வம்சம் திரைப்படம் எனக்கு வந்த கதைதான். அதில் லுங்கி எல்லாம் கட்டிக்கொண்டு, தாடி வைத்துக் கொண்டு, மாடு மேய்க்க வேண்டும் என்று சொன்னார்கள். அப்போது நான் இப்படியெல்லாம் கஷ்டப்பட மாட்டேன்.. அருள் என்று என் தம்பி ஒருவன் இருக்கிறான்.. அவனிடம் சொல்லுங்கள்.. என்று சொல்லிவிட்டேன். (சிரிக்கிறார்) அப்படித்தான் வம்சம் திரைப்படம் நடந்தது.
அதன் பிறகு அருள் நடித்த நிறைய திரைப்படங்கள் ஹிட் ஆனது. டிமாண்டி காலனி, அண்மையில் தேஜாவு மற்றும் பல திரைப்படங்கள் அவருக்கு நல்ல படங்களாக அமைந்து வருகின்றன. அருளுக்கும், படக் குழுவினருக்கும், தயாரிப்பாளருக்கும் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள். இந்த திரைப்படம் வித்தியாசமான படங்களை விரும்பக்கூடிய தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். கிரைம், ஹாரர், ஆக்சன், லவ் என எல்லாமே கலந்து இருக்கும் இந்த திரைப்படம் நிச்சயமாக அனைவருக்கும் பிடிக்கும். இதை ஏற்றுக்கொள்வார்கள்” என்று பேசினார்.