பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் மயில்சாமி காலமானார். 57 வயது மதிக்கத்தக்க நடிகர் மயில்சாமி, பல தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த நடிகர் மயில்சாமி, மிமிக்கிரி கலைஞராக ஆரம்பத்தில் அறியப்பட்டார்.
1984-ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த நடிகர் மயில்சாமி, கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் உள்ளிட்ட அக்கால படங்களில் நடித்தார். 2000-ஆம் ஆண்டுக்கு பிறகு நடிகர் விவேக்குடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார்.
தவிர, காமெடி டைம், டைமுக்கு காமெடி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நடிகர் மயில்சாமி, சினிமாவில் இயங்கி வந்தாலும் பொது சேவைகள் செய்வது, மக்களுடன் இணைந்து மக்களுக்காகவும் சில முன்னெடுப்புகளை செய்வது என இயங்கி வந்தார்.
இந்நிலையில்தான் நடிகர் மயில்சாமி சென்னை கேளம்பாக்கத்தில் நேற்றிரவு சிவராத்திரி நிகழ்ச்சியில கலந்துகொண்டதை டிரம்ஸ் சிவமணி உறுதிப்படுத்தியுள்ளார். ஆம், இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டுள்ள பிரபல இசைக்கலைஞர் டிரம்ஸ் சிவமணி, அந்த சிவராத்திரி நிகழ்வில் தானும் வாசித்ததையும், அப்போது அவருடன் பேசிக்கொண்டிருந்ததையும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் பதிவிட்ட குறிப்பில், “இன்று அதிகாலை தான் அவரை சந்தித்தேன். அநேகமாக அவருடன் கடைசி செல்ஃபி எடுத்தது நானாகத்தான் இருப்பேன் என கருதுகிறேன், மயில்சாமி சார் சீக்கிரமே மறைந்துவிட்டீர்கள். சாந்தி அடையுங்கள் Sir.!” என குறிப்பிட்டுள்ளார்.