சென்னை: நடிகை த்ரிஷா கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி சற்று மீண்டு உள்ளார்,
இந்தியாவில் கொரோனா 3-வது அலையின் தீவிரம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்துக்கும் அதிகமாகவே உள்ளது. அதேநேரம் கொரோனாவின் 3 அலையில் சென்னையில் தினசரி பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும், முகக்கவசத்தை அணிய வேண்டும் போன்ற பல்வேறு அறிவுறுத்தல்களை மத்திய, மாநில சுகாதாரத் துறை தெரிவித்துவருகின்றன.
பொதுமக்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அருண் விஜய், விக்ரம், இசையமைப்பாளர் தமன், நடிகர் அர்ஜுன், கமல்ஹாசன், மீனா, சத்யராஜ், மகேஷ் பாபு உள்பட பல திரை பிரபலங்களுக்கு கொரோனா பாதித்து வீட்டு தனிமையில் இருக்கிறார். சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பிரபல இயக்குநர் பிரியதர்ஷனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகை த்ரிஷாவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி சற்று குணமாகி உள்ளார். இதனை டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அதில் " எல்லா முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றியும், புத்தாண்டுக்கு சற்று முன்பு நான் கொரோனா பாசிட்டிவ் தொற்றுக்கு உள்ளானேன். இது எனது மிகவும் வேதனையான வாரங்களில் ஒன்றாக இருந்தாலும், எனது தடுப்பூசிகளால் இன்று நான் குணமடைந்து நன்றாக உணர்கிறேன். அனைவரும் இவ்வாறே செய்து முகமூடி அணியுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது மருத்துவ சோதனைகளை முடித்துவிட்டு விரைவில் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அவர்களின் அனைத்து பிரார்த்தனைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்" என குறிப்பிட்டுள்ளார்.