பல்வேறு சமூக அநீதி செயல்பாடுகளை அடிக்கடி கண்டித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருபவர் நடிகர் சித்தார்த்.
பாரபட்சமின்றி நேரடியாகவும் காட்டமாகவும் எதையும் விமர்சிக்கும் நடிகர் சித்தார்த் தற்போது உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் செயலை கண்டித்து பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று இணையதளத்தை அதிரவைத்து வருகிறது. அதற்கு காரணம் சித்தார்த் அந்த ட்வீட்டினை அத்தனை காட்டமாக பதிவிட்டுள்ளதுதான்.
இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகின்றனர். பல மரணங்களும் தொடர்கின்றன. இதனிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமல்லாது, டெல்லியின் முன்னணி மருத்துவமனைகள் அனைத்துமே ஆக்ஸிஜன் வேண்டுமென கோரிக்கை வைக்கின்றன.
இப்படி இருக்க, “ஆக்ஸிஜன் தட்டுப்பாடே இல்லை. அப்படி யாராவது செய்தி பரப்பினால் அவை வதந்தியை பரப்புவதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதுடன், அவ்வாறான வதந்திகளை பரப்புபவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்” என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்திருந்தார். இதற்கு பதில் அளித்த, பிரியங்கா காந்தி, “ஆமாம், உபியில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கிறது தான். நான் இப்படி சொல்கிறேன். முடிந்தால் என் மீது வழக்கு தொடர்ந்து எனது சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள் என்று கூறியிருந்தார்.
இதனிடையே, மருத்துவமனைகள் ஏதாவது ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று தவறான கோரிக்கையை முன்வைத்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக திரும்பவும் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார். இந்நிலையில் தான், “பொய் சொல்வது சாமனிய மனிதரோ, ஆன்மிக குருமாரோ இல்லை தலைவரோ யாராக இருந்தாலும் அறை விழுவதை சந்திக்க வேண்டிவரும்” என்று தமது ட்விட்டரில் சித்தார்த் தெரிவித்துள்ளார்.