பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் தமிழில் சூப்பர் டீலக்ஸ் மற்றும் வேலைக்காரன் படங்கள் மூலம் அறியப்பட்டார்.
மலையாளத்திலும் அவர் நடித்த திரைப்படங்கள் எதார்த்தமாகவும் அழுத்தமாகவும் இருக்கும் என்பதால் அவருக்கு தென்னிந்தியா முழுவதுமே ரசிகர்கள் உண்டு. ஃபகத் ஃபாசில் அவரது தந்தையும் பிரபல இந்திய இயக்குநருமான ஃபாசில் தயாரிப்பில் சஜிமோன் பிரபாகர் இயக்கத்தில் உருவாகி வரும் Malayankunju என்கிற மலையாளப் படத்தில் நடித்து வந்தார். இவருடன் ராஜிஷா விஜயன் நாயகியாக இப்படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் ஒரு காட்சிக்காக உயரமான பில்டிங்கில் இருந்து குதிக்கும்போது நிலைதவறி ஃபகத் ஃபாசில் விழுந்துவிட்டதாக்வும் அவருக்கு மூக்குப் பகுதியில் அடிபட்டு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது வீட்டுக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள அவர் ஒரு வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அண்மையில் தான் ஃபகத் ஃபாசில் நடித்துள்ள மாலிக் என்கிற கேங்ஸ்டர் டான் பீரியட் திரைப்படம் மே 13-ஆம் தேதி வெளியாவது உறுதியானது. இதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் குஷியில் இருந்துவந்த நிலையில் இந்த துரதிர்ஷ்ட சம்பவம் நடந்துள்ளது.