சன் டிவியில் தற்போது புதிதாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. மக்கள் மத்தியில் இன்று வரை பேசப்பட்டு வரக் கூடிய 'கோலங்கள்' தொடரை எடுத்ததுடன், 'கோலங்கள்' சீரியலில் அனைவரின் மனம் கவர்ந்த தொல்ஸ் எனும் தொல்காப்பியம் என்கிற கேரக்டரில் நடித்தவரான, இயக்குநர் திருச்செல்வம் தான், 'எதிர்நீச்சல்' தொடரையும் தற்போது இயக்கி வருகிறார்.
இந்த சீரியலில் இடம்பெற்றிருந்த காட்சி ஒன்று, தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் சர்ச்சையை ஏற்படுத்தியதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த காட்சியின் உண்மை பின்னணி குறித்தும், சிலர் மத்தியில் அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது குறித்தும் எதிர்நீச்சல் சீரியலின் இயக்குநர் திருச்செல்வம் அவர்களிடம் கேட்டோம்.
இந்த சீரியலில், பல திரைப்படங்களில் நடித்துள்ள முன்னணி நடிகர் மாரிமுத்து, இந்த தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே போல அஜித்தின் வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகை கனிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மணமகளுடன் டான்ஸ்
இந்த தொடரின் ஒரு காட்சியில், ஒரு திருமணம் நடக்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன. அப்போது மணப்பெண்ணை மேடைக்கு அழைத்து வரும் மற்ற சில பெண்கள், வரும்போது நடனமாடிக் கொண்டே தற்போதைய ட்ரெண்ட்டுக்கு ஏற்ற வகையில், மேடையை நோக்கி வருகின்றனர். இதனை மேடையில் நின்று காணும் மாரிமுத்து, ஆவேசம் அடைகிறார்.
கோபப்பட்ட மாரிமுத்து
உடனடியாக மணப்பெண் மற்றும் உடனிருந்த பெண்களை நோக்கி கோபமாக பேச ஆரம்பிக்கும் மாரிமுத்து, "என்னடா கல்யாணத்துல வந்து டான்ஸ் ஆடிட்டு இருக்கீங்க. இந்த கருமத்த எல்லாம் வெளியே போய் வெச்சுக்கோங்க டா" என்கிற ரீதியில் கத்த ஆரம்பித்து விட்டார். அத்துடன், திருமண புகைப்பட கலைஞர்களுக்கும் அர்ச்சனை கொடுக்கிறார். திருமண நேரத்தில், ஃபோட்டோவுக்கு வேண்டி மீண்டும் தாலி கட்ட சொல்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டு, புகைப்பட கலைஞர்களையும் நன்றாக வாரினார்.
சர்ச்சை காட்சியா?
இப்படி திருமணத்தில் தற்போதைய ட்ரெண்ட் குறித்தும், வெட்டிங் போட்டோகிராஃபர் பற்றியும் மாரிமுத்து பேசியுள்ள வசனங்கள், சிலர் மத்தியிலும் சில அமைப்புகள் மத்தியிலும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலின் இயக்குநர் திருச்செல்வம், தம்முடைய சீரியலில் வரும் இந்த காட்சி குறித்து விளக்கத்தினை 'Behindwoods' சேனலுக்கு பிரத்தியேக பேட்டி ஒன்றில் அளித்துள்ளார்.
ரெகுலரா பார்க்காதவர்கள் தவறா புரிஞ்சுக்கிட்டாங்க
அதில் பேசிய அவர், “அந்த கருத்து, எதிர்நீச்சல் தொடரின் மையக்கருத்து கிடையாது. நம் தொடரின் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் ஒருவர் பேசுவது. பழமைவாதத்தில் இருந்து துண்டுபடாத ஒரு கதாபாத்திரம் தான் அந்த வசனத்தை பேசுகிறார். அந்த கதாபாத்திரம் இந்த கால இளைஞர்கள் குறித்த விஷயங்களை குறை கூறுவதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த சுமார் 20 எபிசோடுகளாகவே அந்த கதாபாத்திரத்தை அப்படி தான் காட்டி வருகிறோம். அந்த கேரக்டரின் பிற்போக்குத் தனத்தை சாடுவதே இந்த கதையின் மையம்.
முற்போக்கு தான் எதிர்நீச்சலின் மையக்கரு
இதே காட்சிக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர். ஆனால், நான் பாராட்டுக்கோ, விமர்சனத்துக்கோ, அந்த காட்சியை உருவாக்கவில்லை. கதை நகர்வுக்காக உருவான காட்சி தான் அது. ஆனால், தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. திறமைகளை அடுப்பங்கரையிலேயே வைத்துக்கொண்டு முடங்கி வாழும் நிலையில் இருந்து விடுபட்டு, முற்போக்கு சிந்தனையுடன் முன்னேறுவதே எதிர்நீச்சல் கதை.
புரிந்து கொண்டார்கள்..
எனது முந்தைய சீரியல்களான கோலங்கள் உள்ளிட்ட பல சீரியல்களிலும் சரி, சிதம்பரம் மணிவண்ணன் இயக்கிய வல்லமை தாராயோ வெப் சீரிஸிலும் சரி, முடிந்தவரை முற்போக்கு சிந்தனையை எனது கதாபாத்திரங்கள் பிரதிபலிக்கும். ஆனால் தொடரை முழுமையாகவோ, ரெகுலராகவோ பார்க்காத நபர்கள் தான், இந்த காட்சி பற்றி தவறுதலாக புரிந்துகொண்டு இவ்வாறு பேசி வருகின்றனர். குறிப்பிட்ட இந்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. இதை மட்டும் வைத்துக் கொண்டு தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பலரும் போன் செய்து கேட்டபோது விளக்கம் அளித்துள்ளேன், இதேபோல் சில அமைப்புகளுக்கும் விளக்கம் அளித்தேன், அவர்கள் புரிந்துகொண்டார்கள்.
எதிர்நீச்சலுக்கும் நல்ல வரவேற்பு
நகர்ப்புறங்களில் எப்போதாவது சீரியல் பார்க்கும் சிலர் திடீரென இப்படி ஒரு காட்சியை பார்த்துவிட்டு இப்படி குழப்பம் அடைவதை காண முடிகிறது. ஆனால் என்னுடைய முந்தைய சீரியல்களை போலவே, எதிர்நீச்சல் சீரியலுக்கும் கிராமப்புறம், நகர்ப்புறம் உள்ளிட்ட அனைத்து தரப்பு பார்வையாளர்களிடமும் இருந்து நல்ல வரவேற்பு இருப்பதை காண முடிகிறது. சில திரைப்படங்களை விட நம் சீரியலுக்கு நன்றாகவே வரவேற்பு உள்ளது, நான் சொல்வது சில திரைப்படங்களை தான்..” என இயல்பாக பேசி புன்னகைக்கிறார் ‘எதிர்நீச்சல்’ இயக்குநர் திருச்செல்வம்.