இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சூர்யாவின் 40வது திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'.
இந்த படத்தின் முதல் லுக் வீடியோ ஜூலை 22ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது. அதனைத் தொடர்ந்து படத்தின் அடுத்த போஸ்டர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 23ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி, சஸ்பென்ஸாக இரசிகர்களை ஆச்சர்யப்படுத்த ஜூலை 23 மதியம் ஒரு மணிக்கு 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரும் வெளியாகியது. போஸ்டர்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி பகுதியில் நடைபெற்று வந்தது. ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் காரைக்குடி படப்பிடிப்பு நிறைவடைந்தது என இயக்குனர் பாண்டிராஜ் டிவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் அனைத்து வசனங்களுடைய படப்பிடிப்பும் (26.09.2021) நேற்றுடன் முடிவடைந்து விட்டதாகவும், மேற்கொண்டு இரண்டு பாடல்கள் மட்டும் படமாக்க வேண்டி உள்ளதாகவும், அந்த இரண்டு பாடல்களை சென்னை மற்றும் கோவாவில் படமாக்க இயக்குனர் பாண்டிராஜ் திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பையும் வரும் அக்டோபர் மாதத்துக்குள் முடிக்க சன்பிக்சர்ஸ் நிறுவனம், இயக்குனரை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ISC ஒளிப்பதிவு செய்கிறார் இவர் சூர்யா நடித்த 'நந்தா', 'வாரணம் ஆயிரம்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். 'விஸ்வாசம்' படத்திற்கு தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் டி இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் மையமாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் அமைந்திருக்கலாம் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.