சிறந்த தொலைக்காட்சி தொடர்களை கெளரவிக்கும் 47வது சர்வதேச எம்மி விருது விழா நியூயார்க் நகரில் நடைபெற்றது.
இதில் தொலைக்காட்சி தொடர் பிரிவில் இந்தியா சார்பில் ‘சேக்ரெட் கேம்ஸ்’ சீரிஸும், வெப் மூவீஸ் பிரிவில் ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ திரைப்படமும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. சிறந்த நடிகைக்கான விருது ராதிகா ஆப்தேவுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட இயக்குநர் அனுராக் கஷ்யாப், ராதிகா ஆப்தே, கரண் ஜோகர் ஆகியோருக்கு சிவகப்புக் கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து, சிறந்த டிராமா சீரிஸுக்கான விருது பிரிட்டன் தொடரான ‘மெக்மாஃபியா’வுக்கும், சிறந்த காமெடி தொடருக்கான விருது ‘த லாஸ்ட் ஹேங் ஓவர்’ தொடருக்கும் வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதை ராதிகா ஆப்தே மரினா கெராவிடம் நழுவ விட, சிறந்த நடிகருக்கான விருது துருக்கியைச் சேர்ந்த ஹாலுக் பில்கினருக்கு சென்றது.
விருது வென்ற வெப் சீரிஸான ‘மெக்மாஃபியா’-வில் ‘பேட்ட’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திக் நடித்துள்ளார். தான் நடித்த சீரிஸுக்கு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் நடிகர் நவாசுதின் சித்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.