பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன், முதல் இரண்டு வாரங்களைத் தொடர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பான கட்டம் தற்போது தொடங்கி இருக்கிறது என்று சொல்லலாம்.
காரணம் போட்டியாளர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த டாஸ்குகளைத் தொடர்ந்து, போட்டியாளர்களின் உண்மையான உளவியல், மனநிலை, விருப்பு, வெறுப்பு என அனைத்தும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.
ஒவ்வொருவரும் பிறரை பற்றிய தம்முடைய கருத்துக்களை கூற தொடங்கிவிட்டனர். ஒவ்வொருவரும் பிறரின் செயல்களை மதிப்பீடு செய்ய தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் விஜயதசமி பண்டிகையை ஒட்டி போட்டியாளர்கள் அனைவரும் கடவுளர்களின் வேடங்களை போட்டுக்கொண்டு ஒரு புராண நாடகத்தை அரங்கேற்றம் செய்தனர்.
இதில் நாடக நடிகை தாமரைச்செல்வி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிவபெருமானாக நிரூப் நடித்திருந்தார். பார்வதியாக இசைவாணி நடித்திருந்தார். கோமாளியாக ராஜூ நடித்திருந்தார். கோமாளிக்கு எப்போதுமே ஒரு சிறப்பு உண்டு. நாடகத்தில் வரும் கோமாளி தொடக்கத்தில் கோமாளியாக நாடகத்தை தொடங்கி வைப்பார்.
இடையிடையே நாடகத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் தவறு செய்யும்போது விமர்சிப்பார். அவ்வப்போது சில நாரதர் வேலைகளையும் பார்ப்பார். ஒரு கேரக்டர் பற்றி இன்னொரு கேரக்டரிடம் போட்டுக் கொடுப்பார். தேவை என்றால் புதிய புதிய கதாபாத்திரங்களுக்கு மாறிக் கொண்டே இருப்பார். இப்படி எல்லா கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் முக்கியமான ரோலில் ராஜூ நடித்திருக்கிறார்.
இதேபோல் அபிஷேக் நாடகம் முழுவதும் தபேலா வாத்தியம் வாசித்தார். ஒரு நாடகத்திற்கு தேவையான அத்தனை பின்னணி இசையையும் அபிஷேக் ஒருவராகவே கொடுத்து ஆச்சரியப்படுத்தி அசத்திவிட்டார்.
இதில் கணவன் மனைவியாக நடியா மற்றும் வருண் இருவரும் நடித்திருந்தனர். இறுதியில் சிபியை வந்து தேவியாக வந்து தாமரைச்செல்வி வதம் செய்யும் காட்சி அரங்கேறியது. முடிவில் சிபியை வதம் செய்த தாமரைச்செல்வி, நாடகம் முடிந்து சிபியை அழைத்து, நடிக்கும்போது சாபம் விட்டதால் அவருக்கு விபூதி இட்டு மீண்டும் ஆசிர்வாதம் செய்தார்.
நாடகத்தில் நடிக்கும் போது பேசும் வசனங்கள் எதிர்மறையாக இருக்கும் பட்சத்தில், அந்த வார்த்தைகள் பலித்து நடிப்பவரை பாதித்துவிடக் கூடாது என்பதற்காக நாடகம் முடிந்து இப்படியான சில பரிகார சடங்குகளை செய்வது என்பது வழக்கமான ஒன்று என்பதை தாமரைச்செல்வி வெளிப்படுத்தியிருக்கிறார்.