நடிகர் மயில்சாமியின் மறைவு தமிழ் சினிமா திரையுலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு திரைபிரபலங்கள் மயில்சாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Also Read | "20 நாளைக்கு முன்னாடி போன் பண்ணாரு.. அப்போது கூட".. மயில்சாமி பற்றி சார்லி உருக்கம்..!
57 வயது மதிக்கத்தக்க நடிகர் மயில்சாமி, பல தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த நடிகர் மயில்சாமி, மிமிக்கிரி கலைஞராக ஆரம்பத்தில் அறியப்பட்டார். அதனை தொடர்ந்து ஏராளமான படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் பலகோடி மக்களை சிரிக்க வைத்தவர். இந்த சூழ்நிலையில் அவருடைய இழப்பு ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் டிரம்ஸ் சிவமணி, மயில்சாமி மறைவு குறித்து பேசுகையில்,"மகா சிவராத்திரி அன்று மயில்சாமி எனக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தார். கேளம்பாக்கம் சிவன் கோவிலுக்கு போறேன் அண்ணே. நீங்க வந்து வாசிச்சா நல்லா இருக்கும் என்றார். எனக்கு வடபழனி மற்றும் தி நகர் ஆகிய இரண்டு இடங்களிலும் வாசிக்க வேண்டியிருந்தது. அதை முடித்துக் கொண்டு நான் அங்கே வருவதாக சொன்னேன். தி.நகரில் நான் இருக்கும் போது பத்துக்கும் மேற்பட்ட முறை எனக்கு போன் செய்தார். நான் வருவேன் என அங்கு சொல்லி இருக்கிறார் போல. நிச்சயம் நான் வந்து விடுவேன் என அவரிடம் சொன்னேன்."
"அங்கு சென்ற பிறகு கீழே அமர்ந்து வாசிக்கலாம் என நான் அமர்ந்து விட்டேன். அவரும் என்னுடன் கீழேயே அமர்ந்து கொண்டார். அப்போது நாதஸ்வரம் வாசித்தவர்களுக்கு ஏதாவது கொடுக்க நினைத்தேன். ஆனால் என்னுடைய உதவியாளர் தூரத்தில் இருந்தார். இதனை குறிப்பிலேயே உணர்ந்து கொண்ட மயில்சாமி உடனடியாக ஒரு ஆயிரம் ரூபாயை ரகசியமாக கொடுத்து நீங்கள் கொடுப்பது போல கொடுங்க அண்ணே என்றார். அதுதான் மயில்சாமியின் நல்ல உள்ளம். நல்லபடியாக வாசிப்பு முடிந்த பிறகு நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம்."
"ஐந்தாம் கால பூஜைக்கு திருவான்மியூர் மருதீஸ்வரர் கோயிலுக்கு போகிறேன் என சொன்னேன். குடும்பத்தை வீட்டில் ட்ராப் செய்து விட்டு நானும் வரேன் என்று சொன்னார். இல்ல நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு என நான்தான் கூறினேன். கடைசியாக எனக்கு அவர் அனுப்பிய வாய்ஸ் மெசேஜில் அவருடைய குரல் மிகவும் தளர்வாக இருந்தது. எப்போதும் உணர்ச்சிகரத்துடன் பேசக் கூடிய அவர் 'நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம் சாமி. எல்லோருக்கும் நிகழ்ச்சி பிடித்திருந்தது' என உடைந்த குரலில் பேசினார்."
"ஒருவேளை அப்போதே இந்த ஸ்ட்ரோக் பிரச்சனை வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். வீட்டிற்கு வந்த பிறகு மயில்சாமியின் மகன் எண்ணில் இருந்து எனக்கு போன் வந்தது. சொல்லு மயிலு வேற எங்கயும் வாசிக்கணுமா? என கேட்கும்போதே அவருடைய மகன் விபரத்தை கூறினார். நான் அப்படியே அதிர்ந்துபோய்விட்டேன். மகா சிவராத்திரி அன்று மயில்சாமி மோட்சம் அடைந்திருக்கிறார். அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்" என்றார்.
Also Read | "Mayilu ஏன்டா சீக்கிரம் போயிட்ட?".. 39 வருஷ நட்பு.. எமோஷனல் ஆன ரமேஷ் கண்ணா..