திரையுலகில் வலம் வரும் இளம் நடிகை ரைசா வில்சன். பிக்பாஸ் மூலம் பிரபலமான ரைசா வில்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அண்மை புகைப்படம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அந்த புகைப்படத்தில் ரைசாவின் முகம் வீக்கமாக காணப்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் பிரபல மருத்துவமனையின் சிகிச்சை மையம் ஒன்றில் முகப்பொலிவுக்காக 1,27,500 ரூபாய் செலுத்தி சிகிச்சை எடுத்த பின்பு ரத்தக்கசிவினால் இந்த வீக்கம் உண்டானதாக ரைசா புகார் அளித்திருந்தார். தொடர்ந்து தமக்கு ஏற்பட்ட இந்த தவறான சிகிச்சையால் தான், பாதிப்புக்குள்ளானதாகவும் 15 நாட்களுக்குள் 15 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நோட்டீஸ் அனுப்பி இருந்ததாகக் கூறப்பட்டது.
இதனிடையே தம்முடைய வாடிக்கையாளர்கள் மத்தியில் தம் மருத்துவமனை பற்றி அவதூறு பரப்புவதாக ரைசாவின் மீது புகார் அளித்ததோடு மானநஷ்ட வழக்கு தொடர இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பைரவி குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இதுகுறித்த விரிவான தகவல்களை பத்திரிகையாளர் சந்திப்பில் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மருத்துவர் பைரவி செந்தில் இருவரும் நேரடியாக பகிர்ந்து இருக்கின்றனர்.
அப்போது பேசிய மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி, “ரைசா வில்சன் எங்களுடைய மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டது தொடர்பாக மேற்கொண்ட புகார்களை அளித்திருக்கிறார். ஆனால் கடந்த 2010ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தற்போது வரை அவர் எங்களுடைய மருத்துவமனையில் 3 முறை சிகிச்சை பெற்று இருக்கிறார். ஆக, அவர் எங்கள் மருத்துமனையில் சிகிச்சை பெறுவது முதல் முறை அல்ல. அத்துடன் சிகிச்சையில் இப்படியான பாதிப்புகள் ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் 8 நாட்களில் அவை சரியாகி விடும் என்று தெரிந்தும் அவர் எங்கள் மருத்துவமனையின் மீது உள்நோக்கத்துடன் இப்படியான புகாரை அளித்துள்ளார். அது ஏன் என்று தெரியவில்லை. அத்துடன் நாங்கள்தான் முதலில் நீதிமன்றத்திற்கு சென்று இருக்கிறோம். இதை சட்டப்படி எதிர்கொள்வோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த சிகிச்சை குறித்தும் இதில் நடந்தது என்ன என்றும் மருத்துவர் பைரவி தரப்பில் விளக்கம் கூறும் போது, “முகத்தின் தோலில் இருக்கக் கூடிய இயற்கையான சர்க்கரை மாதிரி சுரக்கும் ஒரு திரவத்தை வைத்து முகத்தை மேலும் பொலிவு படுத்தக்கூடிய ஒரு சிகிச்சைதான் இது. இப்படியான சிகிச்சை கடந்த ஜூலை மாதம் ரைசாவுக்கு செய்யப்பட்டது. அதே சிகிச்சை தான் இப்போது மீண்டும் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சிகிச்சைக்கு முன்னதாக அனைத்து விதமான புரொசிஜர்களையும் நாங்கள் பின்பற்றினோம். குறிப்பாக இந்த சிகிச்சை எடுத்துக் கொள்பவர் முழுமனதுடன் சம்மதித்து தம்முடைய ஒப்புதல் அளிக்க வேண்டும், இவற்றையெல்லாம் பெற்றுக்கொண்டு தான் இந்த சிகிச்சை செய்யப்பட்டது. குறிப்பாக இந்த சிகிச்சைக்கு பிறகு சிகிச்சை எடுத்துக் கொள்பவர் எந்த மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்கிற சில தகவல்கள் உள்ளன. அவற்றைப் பற்றியும் அவருக்கு தெளிவாக முன்கூட்டியே கூறி விட்டோம். ரைசாவின் கண்ணுக்கு கீழே இருக்கும் அந்த மெல்லிய குழியை நிரப்புவதற்கு தான் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை அளிக்கப்பட்ட 42 மணி நேரத்தில் இருந்து 72 மணி நேரம் வரை யாராக இருந்தாலும் வீக்கம் உருவாகும். ஒருவேளை வீக்கம் ஏற்படவில்லை என்றால் இந்த சிகிச்சை சரியாக அவர்களுக்கு செயல்படவில்லை என்று தான் பொருள். ஏனென்றால் அப்பகுதியில் இருக்கும் திரவத்தை அது உறிஞ்சுகிறது. இது இயல்பாக நடக்கக்கூடிய ஒன்றுதான். ஆகையால் இந்த சிகிச்சை எடுத்து கொள்பவர்கள் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தது போல, இந்த சிகிச்சைக்கு 24 மணி நேரத்துக்கு முன்னரும், 24 மணி நேரத்துக்கு பின்னரும் ஒருவர் ஆல்கஹால் எடுத்துக்கொள்ளக்கூடாது, புகைபிடிக்கக் கூடாது, வேறு எந்தவிதமான போதை பொருட்களையும் எடுத்துக் கொள்ளக் கூடாது, வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளக் கூடாது, குறிப்பிட்ட சில சத்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் கூட இந்த சிக்கல் உண்டாகும். கடுமையான உடற்பயிற்சி அதிக வெயிலில் தலை காட்டுதல் உள்ளிட்டவற்றை தவிர்க்கவேண்டும். மருத்துவர்கள் கொடுக்கும் மாத்திரைகளை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். நாங்கள் பல்வேறு திரைத்துறை பிரபலங்களுக்கும் இப்படி செய்திருக்கிறோம். இவற்றையெல்லாம் புரிந்தும் தெரிந்தும் தான் இந்த சிகிச்சைக்கு ஒருவர் சம்மதிக்க முடியும். யாரையும் கட்டாயப்படுத்தி இதை செய்ய முடியாது.
ஆகவே இது எளிமையான ஒரு Facial சிகிச்சை கிடையாது. இதை ஏற்கனவே இரண்டு முறை எடுத்துக் கொண்ட பிறகு தான் மூன்றாவது முறை இந்த சிகிச்சைக்கு வருகிறார் ரைசா. அதுவும் விருப்பப்பட்டு கையெழுத்துப் போட்டு முழு அனுமதி கொடுத்த பிறகுதான் அவருக்கு இந்த சிகிச்சை வழங்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் இந்த சிகிச்சைக்கு பிறகு கையாள வேண்டிய வழிமுறைகளையும் அவர்கள் முறையாக கையாண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டாலும் இப்படி நடக்கும்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.