நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்க போகிறார் என இன்று காலையில் இருந்து செய்திகள் வெளியாகி வந்தன. இதற்கு நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்தார். அதில், '' அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என கட்சியை பதிவுசெய்ய நான்தான் விண்ணப்பித்து இருக்கிறேன். இது என்னுடைய முயற்சி தான் விஜயின் அரசியல் கட்சி அல்ல. கட்சியில் இணைவாரா? என்பதை விஜய் தான் சொல்ல வேண்டும்,'' என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் தரப்பில் இருந்து இதற்கான அதிகாரப்பூர்வ விளக்கம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில், ''இன்று என் தந்தை ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து இருக்கிறார் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். அவர் தொடங்கி இருக்கும் கட்சிக்கும், எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக என் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன்.
இதன் மூலமாக அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தெரியப்படுத்தி கொள்கிறேன். மேலும் எனது ரசிகர்கள் என்னுடைய தந்தை கட்சி ஆரம்பித்து இருக்கிறார் என்பதற்காக அக்கட்சியில் தங்களை இணைத்து கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். அக்கட்சிக்கும், நமக்கும், நம்முடைய இயக்கத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என தெரிவித்து கொள்கிறேன்
மேலும் என் பெயரையோ, புகைப்படத்தையோ, எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்,'' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.