நம்ம ஊரை பொறுத்த வரையில் தீபாவளி பண்டிகை என்பது., வெறும் வெடிகளாலும் புதிய உடைகளாலும் மட்டும் நிறைந்துவிடுவதில்லை. வருடா வருடம் தீபாவளிக்கு ரிலீஸாகும் திரைப்படங்களை, தியேட்டர்களில் முட்டி மோதி டிக்கெட் எடுத்து பார்த்துதான், ஒவ்வொரு ரசிகனும் இந்த பண்டிகையை கொண்டாடினான். அதிகாலை ரசிகர் மன்ற காட்சிகள் தொடங்கி, மேட்னி ஷோவுக்கு குடும்பம் குடும்பமாக வந்து படம் பார்க்கும் ரசிகர்கள் கொண்டது நமது தமிழ்நாடு.
அப்படி இருக்க, இந்த வருடம் தியேட்டர்கள், கொரோனா வைரஸ் காரணத்தால் பெரும் இழப்புகளை எதிர்க்கொண்டது. ஊரடங்கு நடவடிக்கையாக மார்ச் 16 முதல் தியேட்டர்கள் மூடப்பட்டன. கடந்த ஏழு மாதங்களாக இதே சூழல் நீடித்து வர., ஆன்லைன்ட் ப்ளாட்ஃபார்ம்கள் என சொல்லப்படும் OTT-ல் தொடர்ந்து பல திரைப்படங்கள் வெளியாக தொடங்கின.
தியேட்டரின் விசில் சத்தத்தையும், நெரிக்கும் கூட்டத்தையும், பாப்கார்னையும் கொஞ்சம் கொஞ்சமாக வெகுஜன மக்கள் மறந்துவிடுவார்களோ என பலரும் யோசிக்கவே செய்தனர். அடுத்து வரும் காலம் ஓ.டி.டி போன்ற நேரடி ரீச் தான் என ஒருபக்கம் வலுவான வாதங்களும் எழுந்தன என்பதை மறுக்கமுடியாது. இதற்கிடையில், திரையரங்க கொண்டாட்டத்தை மிஸ் செய்து வந்த ஒவ்வொரு ரசிகனுக்கும் நல்ல செய்தியை வந்ததுதான் தியேட்டர்களின் திறப்பு குறித்த அறிவிப்பு.
மத்திய அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட, தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. நேற்று முதல் தமிழகத்திலும் திரையரங்கங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு திரையரங்க உரிமையாளர்களும், மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்ட சந்தோஷத்தை, தங்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வெளிப்படுத்தினார்கள். ஆரம்பமே அசத்தலாக, சென்ற தீபாவளிக்கு சூப்பர் ஹிட் அடித்த பிகில், இந்த வருடத்தில் நன்றாக பேசப்பட்ட கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஓ மை கடவுளே, தாராள பிரபு உள்ளிட்ட திரைப்படங்கள் தற்போது தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ளது. மேலும் டிக்கட் கட்டனத்தையும் பல்வேறு தியேட்டர்களில் வெகுவாக குறைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்ட இந்த சூழலில், தற்பொது தீபாவளி பண்டிகைக்கான திரைப்படங்களும் வரிசைக்கட்ட தொடங்கி இருக்கின்றன. ஏற்கனவே வி.பி.எஃப் கட்டனத்தை இந்த மாதம் வெளியாகும் படங்களுக்கு கட்டத் தேவையில்லை என க்யூப் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், சந்தானம் நடித்த பிஸ்கோத், சந்தோஷ் ஜெயகுமார் இயக்கியுள்ள இரண்டாம் குத்து உள்ளிட்ட படங்கள் தீபாவளி ரிலீஸ் என அறிவித்துவிட்டன. இதில் இன்னும் சில படங்கள் இணையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் OTT தளங்களி, அமேசானில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், சன் டிவியில் நாங்க ரொம்ப பிசி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக தயாராக இருக்கின்றன. ஆக., திரைப்படங்கள் இல்லாமல் தீபாவளி எங்கு இருக்கிறது என்ற ரசிகனின் கவலைக்கு இடமில்லாமல்., இந்த பண்டிகை பிசியாக மாறியிருக்கிறது. சுமார் 8 மாதங்களாக முடங்கி கிடந்த ரசிகர்களுக்கு., இப்போது சரவெடியாக வரவிருக்கும் படங்கள் செம உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனால் சினிமா ரசிகர்கள் ஹாப்பியோ ஹாப்பி!!!