சன் டிவி செவ்வந்தி சீரியல் நாயகி, திவ்யா ஸ்ரீதர், நேரலையில் தன் கணவர் குறித்த குற்றச்சாட்டுகளை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் முன்வைத்தார்.
அதில், “பிரபல சின்னத்திரை நடிகராக இருந்து பல்வேறு முன்னணி தொலைக்காட்சிகளில் தொடர்களில் நடித்து வந்த அர்ணவ் என்கிற நைனா முகமதுவும் நானும் 2017-ஆம் ஆண்டு கேளடி கண்மனி சீரியல் மூலம் நட்பாகி, காதலகினோம். அப்போது நான் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்றும், ஒரு குழந்தையும் எனக்கு ஒரு வயது குழந்தை இருப்பதும் அவருக்கு தெரியும். காதலித்தோம், 5 வருடம் லிவிங்கில் இருந்தோம்.
பின்னர் 2 வருடம் முன்பு வானகரத்தில் ஒரு பிளாட் வாங்கினோம், அதற்கு நான் உதவினேன். கொரோனா சமயத்தில் அவருக்கு எந்த சீரியலும் இல்லை. நான் மகராசி சீரியலில் நடித்து வந்தேன். அப்போது எல்லா செலவுகளையும் நானே பார்த்துவந்தேன். கடந்த ஜூன் மாதம் அவரை திருமணம் செய்வதற்காக, அவர் கட்டாயப்படுத்தியதின் பேரில் இஸ்லாமிய மதத்துக்கு மாறினேன். அவரை என் ஆசையால் காஞ்சிபுரம் கோவிலும், பிறகு பாரீஸில் முஸ்லீம் முறைப்படியும் திருமணம் செய்துகொண்டோம். அன்றே ரிஜிஸ்டர் மேரேஜூம் நடந்தது.
ஆனால் திருமண நிகழ்வில் எந்த ஃபோட்டோவையும் யாரும் எடுக்க கூடாது என்றும், இதை மீடியாவில் போடக் கூடாது என்றும், தன் வீட்டில் சம்மதம் வாங்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். பின்னர் திருவேற்காட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் வசித்து வந்த நிலையில் அவர் வேறொரு பெண்ணுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நெருக்கமாக இருந்ததை கண்டறிந்து கேட்டேன். அப்போது அவர் என்னை அடித்தார். அன்று எனது திருமண ஃபோட்டோவை போஸ்ட் செய்தேன். அப்போது எனக்கு போன் பண்ணி, அந்த போஸ்ட்டை டெலிட் பண்ண சொல்லி மிரட்டினார். இல்லையென்றால் பெற்றோரிடம் சொல்லி விவாகரத்து செய்வதாக கூறினார். அதனால் போஸ்டை டெலிட் செய்துவிட்டேன். ஆனால் வீடியோவை டெலிட் பண்ண முடியவில்லை.
ஆனால், அடுத்த நாள், எங்கள் திருமண ஃபோட்டோவை விளம்பர போட்டோஷூட் என்று சொல்லிவிட்டார். என்னையும் அவ்வாறே சோஷியல் மீடியாவில் சொல்ல சொன்னார். அவரது பெற்றோரிடம் இருந்து சம்மதம் வாங்க வேண்டும் என்று சொன்னார். இப்போது நான் மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். தனக்கு குழந்தையே வேண்டாம் என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் சொல்கிறார். அவருடன் இருக்கும் அந்த இஸ்லாமிய பெண் என் கணவரை திருமணம் செய்துகொள்வதாக சொல்கிறார். என் முன்னிலையில் கான்ஃபரன்ஸ் போனில் என் கணவருடன் கொஞ்சலாக ஐ லவ் யூ என சொல்கிறார்.
பின்னர் தான், நான் கர்ப்பமானதை அறிவித்தேன். புகைப்படங்களை மீண்டும் போஸ்ட் செய்தேன். இதனால் அவரது வீட்டில் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அவர்களின் வீட்டில் இருப்பவர்கள்தான் முடிவு பண்ணுவார்கள் என்றும் கூறுகிறார். அவருடைய அப்பாவுக்கும் போன் பண்ண முயற்சித்தேன். அவருடைய பெற்றோருடனும், குடும்பத்துடனும் பேசவே விடமாட்டேன் என்கிறார். நான் கர்ப்பிணியாக இருப்பதை அறிவித்ததும், அவர் என்னை வெளிமாநிலத்து பெண் என சொல்லி மிரட்டினார். எங்களுக்கு இடையே குழந்தை தொடர்பான வாக்குவாதம் ஏற்பட்டு, இதில் அவர் என்னை பிடித்து தள்ளி விட்டுட்டார். நான் விழுந்தேன், எனக்கு வலி ஏற்பட்டு, ரத்தம் கசிய தொடங்கியது. அப்போதும் அவரை தேடி அந்த பெண் இருக்கும் அபார்ட்மெண்டுக்கு சென்று பார்த்தபோது, அங்கு என் கணவர் அந்த பெண்ணின் கணவர் என சொல்லிக்கொண்டு தினமும் போய் வருவதாக அங்கிருந்த செக்யூரிட்டி சொன்னார்.
பின்னர் நான் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வந்து சேர்ந்து, சிகிச்சை பெற்றுள்ளேன்." என்று கண்ணீர் மல்க குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் திருவேற்காடு போலீசருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, தகவலின் பேரில் திருவேற்காடு போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து, நடிகை திவ்யா ஸ்ரீதருடன் விசாரணை செய்துள்ளளனர். இதுகுறித்து நடிகையின் தரப்பில் இருந்து புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சின்னத்திரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.