தெய்வத்திருமகள், சைவம், தாண்டவம், மதராசப்பட்டினம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் விஜய்.
குறிப்பாக தல அஜித் நடிப்பில் கிரீடம் திரைப்படத்தையும், தளபதி விஜய் நடிப்பில் தலைவா திரைப்படத்தையும் இயக்கி புகழ் பெற்றவர் விஜய். இயக்குநர் விஜய்க்கு கடந்த 2019 ஆம் வருடம் ஐஸ்வர்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அத்துடன் இந்த தம்பதியருக்கு சென்ற 2020-ஆம் ஆண்டு மே 30-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தையின் பெயர் என்ன என்பது பெரும்பாலும் வெளியில் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் விஜய் தம்முடைய குழந்தையின் முதல் பிறந்த நாளை தன் மனைவியுடன் இணைந்து கோலாகலமாகக் கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
அந்த புகைப்படத்தில் விஜயின் குழந்தையின் முதலாவது பிறந்த நாளையொட்டி மகனுக்கு கேக் வெட்டுவதற்காக விஜய் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் இணைந்திருக்கின்றனர். அந்த கேக் மீது பிறந்தநாள் வாழ்த்துக்கள் துருவா விஜய் என்று எழுதப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இவர்களின் குழந்தையின் பெயர் துருவா விஜய் என்கிற தகவல் தற்போது பலருக்கும் தெரிய வந்துள்ளது.
இயக்குநர் விஜய் கங்கனா ரனாவத் நடிப்பில் தலைவி திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகுமா? திரையரங்கில் வெளியாகுமா? என்கிற பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்கில் வெளியிட தேதி முடிவு செய்யப்பட்டு, மீண்டும் கொரோனா சூழலால் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: “மரகத நாணயம் அடுத்த பார்ட் வருதா?”.. இயக்குநரே வெளியிட்ட மரண மாஸ் அப்டேட்!