கொரோனா மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் பிரதமர் நரேந்திரமோடி, வருகிற 22 ஆம் தேதியன்று இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளிய வரவேண்டாம் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
ஏற்கனவே பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வருகிற 31 ஆம் தேதி வரை விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இது ஒருபுறம் இருக்க, கொரோனா சார்ந்த மீம்களும் அவ்வப்போது வைரலாகி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வடிவேலு ஒரு படத்தில் தன்னிடம் கை கொடுக்க வருபவரிடம், கைகளால் பல்வேறு விஷயங்களை செய்துவிட்டு அடுத்தவனுக்கு கை கொடுப்பதா ? என்று கடிந்து கொள்வார். பின்னர், 'யாருடா சொல்லிக்கொடுத்தா இந்த நாகரிகத்த, நம்ம ஊர்காரங்க மாதிரி கையெடுத்த கும்பிட வேண்டியது தான ? இனி யாருக்காவது கை கொடுக்கிற பார்த்தேன்.. அவ்ளோ தான்' என்று கண்டிப்பார்.
தற்போது யாரும் கைக் கொடுக்காதீர்கள், கைகளை நன்றாக கழுவ வேண்டும் என்பது போன்றவை கொரோனா விழிப்புணர்வு வாசகங்களில் முக்கியமானது. இதற்கு முன்னெச்சரிக்கை விடுக்கும் விதமாக அன்றே சொல்லிவிட்டார் நம் வடிவேலு. நாம் தான் கேட்காமல் விட்டுவிட்டோம் என வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பகிர்ந்த இயக்குநர் விக்னேஷ் சிவன், ''மிகச் சரியான பாய்ண்ட் , வடிவேலு ஒரு கடவுள். பாதுகாப்பாகவும் தூய்மையாகவும் இருங்கள். உங்களுக்கு நெருக்கமானவர்களையும் பார்த்துக்கொள்ளுங்கள். நிலைமை விரைவில் சரியாகும். இது கொஞ்சம் காலம் தான் இருக்கும். அடிப்படை ஒழுக்கத்தையும் தூய்மையையும் கடைபிடிப்போம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.