தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக கலக்கி வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடச்சென்னை உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த வருடம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியான 'அசுரன்' திரைப்படம் தமிழில் சூப்பர் ஹிட் படமாக அமைந்திருந்தது. தனுஷூடன் இந்த படத்தில் மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே அருணாசலம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவானது.கலைப்புலி எஸ்.தாணு தனது வி கிரியேஷன்ஸ் சார்பாக தயாரித்த இந்த படத்தை தயாரித்தனர்.
இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் இந்திய அரசின் சார்பில் சினிமா துறைக்கான தேசிய விருதுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து பல தமிழ் கலைஞர்கள் கௌரவிக்கப்ட்டுள்ளனர். அதிலும் முக்கியமாக இந்த வருடத்திற்கான சிறந்த படமாக அசுரன் திரைப்படமும், சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் தனுஷம் வென்றுள்ளனர். இது தமிழ் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விருது வென்ற வெற்றிமாறன் கூறுகையில் "அசுரன் போன்ற ஒரு படம் என்ன செய்ய வேண்டுமோ அதை தியேட்டரில் ரிலீஸின் போதே செய்துவிட்டது. மக்கள் மனதில் பல கேள்விகளை எழுப்பியது. அந்த மகிழ்ச்சியை இந்த விருது இன்னும் கூட்டியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.