ஒரு சினிமாவில் கருத்தியல் சொல்லும் திரைப்படங்கள் இருக்கின்றன. வணிக ரீதியான ஃபார்முலா சினிமாக்களும் வரவேற்பைப் பெறுவதுண்டு. சில இயக்குநர்கள் கருத்தியலுடன் கூடிய வணிக சினிமாவை எடுக்கின்றனர். அந்த வகை சினிமாக்களை திரையில் வெற்றிகரமாக கொடுத்து வருபவர் இயக்குநர் வெற்றிமாறன்.
சாதாரண மக்களின் வாழ்க்கை பின்னணியும், அதில் உள்ள நுணுக்கமான சிக்கல்களையும் தமக்கே உரிய அசாத்திய திரைமொழியில் இயக்கி வெற்றிபெறச் செய்யும் படைப்பாளியான இயக்குநர் வெற்றிமாறனுக்கு இன்று பிறந்த நாள். அவரது இந்த பிறந்த நாளில் ரசிகர்கள் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். வெற்றிமாறனின் முதல் படமான 'பொல்லாதவன்'. தனுஷ் நடித்த இந்த படத்தில் ஒரு 'பல்சர்' பைக்கை வாங்க கனவு காணும் மிடிக்கிள் க்ளாஸ் இளைஞனின் கனவும், அதற்கான போராட்டமும், அதில் எழும் புதிய பிரச்சனையும் அதன் தொடர்ச்சியாக உருவாகும் பகை, இடையில் அப்பா - மகன் உறவு என எதார்த்தம் கலந்த கமர்ஷியல் கதையாக 'பொல்லாதவன்' வெற்றிபெற்றது.
இதனை தொடர்ந்து மதுரை மண்ணில் புழுதியை பறக்க விட்ட 'ஆடுகளம்' நல்ல வரவேற்பைப் பெற்றது. சேவல்களுக்கு இடையில் நிகழும் மோதல்களில் மனித ஈகோ மோதல்களாக காட்சிப்படுத்தப்பட்ட இந்த படம் இரண்டு தேசிய விருதுகளுடன் அவருக்கென தனி அடையாளத்தை தந்தது. பிறகு 2016-ல் மு.சந்திரகுமாரின் ‘லாக்கப்’ நாவலைத் தழுவிய 'விசாரணை' திரைப்படம். காவல்துறைக்குள்ளும், காவலர்களுக்கும் - மனிதர்களுக்கும் என அதிகார அமைப்பின் இரண்டு விதமான அடுக்குகளை 'விசாரணை'க்குட்படுத்தும் இந்தப் படம் வெனிஸ் முதல் ஆஸ்கர் வரை சென்றது.
தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ‘வடசென்னை’, அதனைத் தொடர்ந்து சாதிய அடுக்குகளின் வேர் வரை சென்று பேசிய ‘அசுரன்’. 'ஒரு மொழி பேசுறோம். ஒரு நிலத்துல வாழுறோம்.. இது போதாதா ஒன்னு சேர' என்கிற சமூக-சமத்துவ-ஒருமைப்பாட்டு பார்வையே 'அசுரன்' படத்தின் ஆதாரமாய் விளங்கியட். வெகுஜன சினிமாவாக அனைத்து மக்களையும் சென்றடைந்த இப்படமும் தேசிய விருதுகளை பெற பேக் டூ பேக் ஹிட் பட இயக்குநர் என்கிற பெருமைக்குரியவராய் திகழ்கிறார் வெற்றிமாறன்.
இருப்பினும் அது ஒரு மேஜிக், அது இயல்பாய் நடக்க வேண்டும் என்று பிஹைண்ட்வுட்ஸ் விருதுமேடையில் சமநிலை மாறாமல் தன்னடக்கமாய் பேசி நகர்ந்த வெற்றிமாறனின் அடுத்த படம் விடுதலை. கதை நாயகனாக சூரியும், கதாநாயகனாக விஜய் சேதுபதியும் நடிக்கும் இப்படம் 2 பாகங்களாக வெளிவரவுள்ளது. இளையராஜா இசையில் உருவாகும் இப்படத்தை தொடர்ந்து கலைப்புலி S தாணு தயாரிப்பில் சூர்யா நடிப்பிலான வாடிவாசல் திரைப்படத்தையும் வெற்றிமாறன் இயக்குகிறார்.
சிறுபத்திரிக்கை சூழலில் இலக்கிய பண்பாட்டை வளர்த்த பத்திரிகைகளுள் ஒன்றான ‘எழுத்து’ பத்திரிகையை நடத்தி சி.சு.செல்லப்பாவின் நாவலைத் தழுவி ‘வாடிவாசல்’ படம் உருவாகிறது.
இந்நிலையில் தான் வெற்றிமாறனின் இந்த பிறந்த நாளுக்கு வாடிவாசல் என எழுதப்பட்ட Cake-ஐ வெற்றிமாறன் மீது அன்புகொண்ட உள்ளங்கள் சிலர் கொண்டு வந்து முன்வைக்க, ‘விடுதலை ஷூட்டிங்க்க்கு வாடிவாசல் Cake-ஆ?’ என சிரித்தபடி கேட்ட வெற்றிமாறனின் மகிழ்ச்சியுடன் கேக்கை வெட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.